தமிழகத்தில் 60 சதவிகிதம் பரப்பளவில் பயிர்கள் மானாவாரியாக மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டுகிறது. பொதுவாக கோடை காலத்தில் மொத்த மழையளவில் 15 சதவிகிதம் அதாவது 140 மில்லி மீட்டர் மழை மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் பொழிகிறது.
இச்சமயத்தில் கிடைக்கின்ற மழையினை சேமித்து பயன்படுத்தி கொள்வதன் மூலமும், பாத்தி, பயிர் மேலாண்மை மூலமும் நிலத்தின் மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்து மானாவாரி பயிர்களில் அதிக லாபம் பெற முடியும். மண் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைப்பது அவசியமானது.
உழவுக்கு ஏற்றது எது:
கோடை உழவு செய்ய கோடை மழைக்கு முன் அல்லது முதல் மழையினை பயன்படுத்தி மண்ணை புரட்டி விடும் சட்டி அல்லது மோல்டு கலப்பையை பயன்படுத்தி சரிவிற்கு குறுக்காக உழ வேண்டும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்படும் மற்றும் கோடை மழையினை பூமி உள்வாங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர தொடங்கும்.
மேலும் பூச்சியின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் மற்றும் களை விதைகள் மண்ணின் மேற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பறவைகள் மற்றும் வெயிலின் தாக்கத்தால் அழியும். கோடை உழவு செய்வதால் முந்தைய பயிரின் கழிவுகள் புதைக்கப்பட்டு மக்கி உரமாகும்.
அழசால் அகல பாத்தி:
அழசால் அகல பாத்தியை உருவாக்குவதன் மூலம் பயிருக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். அழசால் அகல பாத்தி மானாவாரி கரிசல் நிலத்திற்கு ஏற்றது. இது நீர் தேங்குவதை தடுத்து எளிதில் நீர் வடிய உதவுகிறது. ஒரே வாய்க்காலின் மூலம் பயிர் முழுவதற்கும் நீர் பாய்ச்ச முடியும். அகல பாத்தி அமைப்பதால் எளிதாக எந்திர முறை விதைப்பு மற்றும் களை எடுப்பு மேற்கொள்ளலாம்.
கழிவு மேலாண்மை:
பயிர்களின் பயன் தரக்கூடிய பகுதிகள் தவிர மீதமுள்ள தட்டை மற்றும் வைக்கோல் போன்ற பயிர்க்கழிவுகளை அதே நிலத்தில் மறுசுழற்சி செய்வதன் மூலம் அதிக பயன்பெறலாம். இச்செயல்பாடு, நிலத்தில் இயற்கையான கரி பொருளினை அதிகப்படுத்துகிறது. மேலும் நிலத்தின் உயிர்த்தன்மையை அதிகரிக்கிறது. மண் துகள்களை ஒருங்கிணைத்து மண் அரிப்பினை தடுக்கிறது. நீர் மற்றும் உரச்சத்தின் பயன்பாட்டு திறனை உயர்த்துகிறது. வறட்சியில் இருந்து பயிர்களை காக்க உதவுகிறது.
த.விவேகானந்தன், துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் மதுரை
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்