சூரிய ஒளி மின்சாரம் பயிர்களுக்கு தண்ணீர்

விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் தற்போது சூரிய ஒளி மின்சார பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால் இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாய நிலங்கள் பள்ளத்தாக்குகள், சரிவான பகுதிகளில் அமைந்துள்ளன.

பள்ளத்தில் உள்ள கிணற்றில் இருந்து டீசல் மோட்டார் மூலம் மேடான பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்று விவசாயிகள் பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். டீசல் விலை அதிகமாக உள்ளதாலும், வெகு தூரத்தில் இருந்து கிராம பகுதிகளுக்கு டீசல் வாங்கி வர வேண்டிய நிலை இருப்பதாலும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

Courtesy: Dinathanthi
Courtesy: Dinathanthi

சூரிய ஒளி மின்சாரம்

இந்த நிலையில் தற்போது விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாறி வருகிறார்கள். இதற்காக அவர்கள் விவசாய நிலங்களில் சூரிய ஒளி மின் தகடுகளை அமைத்து, அதில் இருந்து மின்சாரம் பெற்று மோட்டார் பம்புகளை இயக்கி வருகின்றனர். இது குறித்து எம்.பாலாடா பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்த் கூறியதாவது:–

காய்கறி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு டீசல் மோட்டார் பம்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. ஊட்டியில் இருந்து டீசல் வாங்கி வர வேண்டி உள்ளதால் அதிக செலவு பிடிக்கிறது.

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை மானியத்தோடு சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் ஊட்டியில் உள்ள காலநிலையிலும் இந்த சூரிய ஒளி மின்சாரம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மானியம்

இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், சூரியஒளி மின்சார மோட்டார் பம்புகள் அமைக்க 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 13 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *