சூரிய மின் சக்தி மூலமாக கடலூர் விவசாயி லாபகரமான முறையில் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
லாபகரமான தொழிலாக இல்லாததால் விவசாயப்பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானவர்கள் அத்தொழிலிலிருந்து விலகி வருகின்றனர். விவசாயத்தின் தேவையை உணர்ந்த தமிழக அரசு, விவசாயிகள் லாபகரமான முறையில் விவசாயம் செய்திட பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயப்பணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின்மோட்டார் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் 5 குதிரைத் திறன் கொண்ட சூரியஒளி மின்மோட்டார்கள் 34 அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு சூரியஒளி மின்மோட்டார் அமைக்க ரூ.4.40 லட்சம் செலவாகும் நிலையில், இத்திட்டத்தில் தமிழக அரசு மானியமாக ரூ.3.35 லட்சம் வழங்குகிறது. விவசாயிகளின் பங்களிப்புத் தொகையானது ரூ.1.05 லட்சம் மட்டுமே.
இத்திட்டத்தை பயன்படுத்தி கடலூர் வட்டம், புதுக்கடையைச் சேர்ந்த விவசாயி பி.வி.ஜெ.முத்துக்குமாரசாமி தனது விவசாய நிலத்தில் மின்மோட்டார் அமைத்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கள ஆய்வுப்பணியாக செய்தியாளர்களுடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து விவசாயி முத்துக்குமாரசாமி கூறுகையில், மின்மோட்டார் மூலமாக விவசாயம் செய்த நேரத்தில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணமாக செலுத்தி வந்தேன். தற்போது சூரிய ஒளி மின்சாரம் மூலமாக 2 ஏக்கர் பயிர் செய்து வருகிறேன். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறேன். நல்ல லாபகரமானதாக விவசாயம் மாறி விட்டது என்றார்.
ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறுகையில், சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் மானிய திட்டத்தில் மாநில அரசு 80 சதவீதமும், பயனாளி 20 சதவீதமும் பங்களிப்பு செலுத்த வேண்டும். 5 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் மூலமாக 2 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும். 2015-16ஆம் ஆண்டுக்கு கடலூர் மாவட்டத்துக்கு 100 சூரியஒளி மின்மோட்டார் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நன்றி தினமணி
பசுமை தமிழகத்தின் கருத்து: சூரிய ஒளி மோட்டார் மூலம் நீர் பாசனம் செய்வதில் நல்லது என்ன வென்றால் மின்சாரம் கட்டணம் முற்றிலுமாக இல்லை.ஆனால் மூலதன செலவு அதிகம். தொழிற்நுட்பம் முன்னேறி மூலதன செலவு இன்னும் நிறைய விவசாயிகள் முன் வருவார்கள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தகவலுக்கு நன்றி