சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி!

கடலூர் மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர்.

விவசாயம்

நெல் பயிரிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். பருவ மழை பொய்த்துப் போவது, காவேரி நீர் பிரச்னை, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, கடல் நீர் உட்புகுதல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு போகம் பயிர் செய்வதே இன்று சவாலான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன் முழு அரசு மானியத்தில் தமிழகத்தில் முதன் முதலாகச் சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் பயிர் சாகுபடி செய்து சத்தம் இல்லாமல் சாதனை செய்துள்ளார்.

இதுவரை விவசாயிகள் கரும்பு, வாழை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் மட்டும் சொட்டு நீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்து வந்துள்ளனர். விவசாயி ராஜாராமன் தனது ஒரு ஹெக்டேர் நிலத்தில் வேளாண் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்துள்ளார்.

தற்பொழுது பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது.

 ராஜாராமன்

இதுகுறித்து விவசாயி ராஜாராமன் கூறியதாவது. “நான் கோவையில் நடைபெற்ற விவசாய கண்காட்சிக்குச் சென்றபோது அங்கு சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்யும் முறை பற்றி அறிந்தேன். உடன் கடலூரில் உள்ள வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பிரதமரின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் எனது ஒரு ஹெக்டேர் நிலத்தில் சொட்டுநீர்ப் பாசன நெல் சாகுபடி மூலம் நெல் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நாற்று நட்ட நாளில் இருந்து ஏக்கருக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இந்த முறையில் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானது. முன்பு நான் எனது வயலுக்கு 6 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினேன்.

ஆனால், இந்த முறையில் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகிறேன். இதனால் தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இந்த முறையில் இதற்கு என்று உள்ள தண்ணீரில் கரையும் உரங்களைச் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நெற்பயிருக்குச் செலுத்துவதால் ஆள் வைத்து தனியாக உரம் போடத் தேவையில்லை. சொட்டு நீர்ப் பாசன முறைப்படி நெல் விவசாயம் செய்வதால் தண்ணீர், மின்சாரம் சிக்கனமாவதுடன் உரம் போடுவது போன்ற பணிகளுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலியும் மிச்சமாகிறது. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்”. இவ்வாறு கூறினார்.

பூவராகவன்

கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன் கூறியதாவது.”சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்வதால் அதிக அளவில் தண்ணீர் சேமிக்கப்படும். சாதாரண முறையில் நெல் சாகுபடி செய்வதுபோல்தான் இந்த முறையிலும் சாகுபடி செய்ய வேண்டும்.

நல்ல மகசூலும் கிடைக்கும். நீரில் கரையக் கூடிய பிரத்தியேக உரம் பயன்படுத்தப்படுவதால் ஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்தக் காலத்தில் ஆட்களை வைத்து உரம் போடத் தேவையில்லை, விவசாயிகளின் செலவு குறையும். கடலூர் மாவட்டத்துக்கு ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அரசு வழங்கும் மானியத்தைப் பெற்று சொட்டு நீர்ப்பாசன முறையில் நெல் சாகுபடி செய்து பயன்பெறலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: பசுமை விகடன்

பசுமை தமிழகம் கருத்து:

உலகம் வெப்பமயகி வருவதால், மழை பெய்யும் அளவு, காலம் எல்லாம் மாறி வருகிறது. இதனால் ஆறுகளில் நீர் குறைந்து அணைகளில் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. நீர் அதிகம் கேட்கும் நெல் மற்றும் கரும்பு பயிர்களை சொட்டு நீர் பாசனத்திற்கு மெதுவாக மாற்றுவது நல்லது.அரசு இதற்கு மானியம் கொடுத்து பயிற்சியும் கொடுத்தால் நாம் காவேரி நீருக்கும் தென் கிழக்கு பருவ மழைக்கும் கையேந்தி நிற்பது குறையும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

2 thoughts on “சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *