வேளாண்மையில் நன்மை தரும் உத்திகளை ஒவ்வொரு பயிருக்கும் கடைப்பிடித்திட வேண்டும். குறிப்பாக வளமான மண்ணாக இருப்பினும், அதிக நீரை பாய்ச்சி விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியாது.
பயிரின் தேவை அறிந்து, பருவம் அறிந்து, பெய்த மழையை பொறுத்து, நீர் பயிருக்கு கிடைக்க செய்ய வேண்டும். அதாவது நமக்கு எப்படி உணவு தொடர்ந்து தேவைப்படுகிறதோ, அதேபோல் பயிரின் தேவையை கணக்கிட்டு உரத்தையும், நீரையும் ஒருங்கே செலுத்துவதான் சிறந்தது.
வெறும் தண்ணீரில் செடிகள் வளராது. மண்ணில் ஆண்டு தோறும் வளம் சேர்க்கும் உத்திகள் கடைப்பிடிப்பது அவசியம்.
மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருகிட கரையும் உயிர் உரப் பாசனம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஆகிய கிருமிகளை திரவ வடிவுப் பயிருக்கு அளிக்க சொட்டு நீர்ப்பாசன உப கரணங்கள் உதவும். மேலும் ஹியுமிக் அமிலம் செலுத்தலாம். பஞ்சகவ்யாவை நீர் வழியாக செலுத்தலாம். பயிரை காக்க உதவும் வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்பிலை கரைசல் மற்றும் பூச்சி விரட்டி கரைசல் மூலம் பயிர் பாதுகாப்பு செலவை வெகுவாக குறைக்கலாம். புத்திசாலி விவசாயி என்றால் பயிரை பேணிட நுண்ணீர்ப்பாசன முறைகளை கையாள வேண்டும்.
தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறைகளின் ஒத்துழைப்புடன் மானிய விலையில் அரசே உதவி வரும் திட்டம் தான் ‘பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம்’ என்பதாகும்.இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.
பந்தல் காய்களில், பசுமை குடில்கள், தென்னந் தோப்புகள், ஏலக்காய், மிளகு, கிராம்பு, எஸ்டேட் பயிர்கள், பழ வகை மரங்கள், மூலிகை பயிர்கள், மலர்கள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் உயர் உச்சகட்ட வருமானம் பெற உதவும் சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
தொடர்புக்கு 9842007125 .
– டாக்டர்.பா.இளங்கோவன்,
வேளாண் துணை இயக்குனர், தேனி.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்