கிணத்துக்கடவு அடுத்த கல்லாபுரத்தில், சோலார் மின்திட்டத்தை பயன்படுத்தி, மூன்று ஏக்கர் விளைநிலத்தை பசுமையாக மாற்றியுள்ளார் விவசாயி.கிணத்துக்கடவு மேற்கு பகுதியில், கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. ஆனால், நடப்பு ஆண்டு கிணறுகள், ஓடைகள், சிறு குட்டைகளில் நீர் இருந்தும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, பயிர்களும், காய், பழங்கள் வெதும்பி, மார்க்கெட்டில் விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாபுரத்தில் உள்ள மானாவாரி நிலம், பயிர் வளத்துடன் பசுமையாக காட்சி அளிக்கிறது.கோவை, சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், சிறு தொழிற்சாலை நடத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன், கல்லாரபுரத்தில் தோட்டம் வாங்கி, பராமரித்து வருகிறார். பாசன நீர் பற்றாக்குறை காரணமாக, பொதுக்கிணற்றை நம்பாமல், தனியாக போர்வெல் அமைத்தார். மின் இணைப்பு கிடைக்காத நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் செலவழித்து, சோலார் மின் உற்பத்தி உபகரணங்கள் அமைத்து, பயிருக்கு பாசனம் மேற்கொண்டார்.
தற்போது, மூன்றரை ஏக்கர் நிலத்தில் செடி அவரை, கால்நடைக்கான தீவனப்பயிர் மற்றும், 70 தென்னை சாகுபடி செய்துள்ளார்.செல்வராஜ் கூறியதாவது:மின் இணைப்புக்காக காத்திருக்கும் நிலை உள்ளதால், சோலாருக்கு மாறி, பயிருக்கு பாசனம் கொடுத்துள்ளேன். கால்நடைகளும் வளர்க்கப்படுகிறது. அவற்றுக்கு தேவையான நீரும், தீவனமும் சாகுபடி செய்யப்படுகிறது. செடி அவரை காய்க்கும் நிலைக்கு வந்துள்ளது.மேடான பகுதிக்கு நீர் உந்துதல் சக்தி இல்லாததால், 70 மரங்களுக்கு தேவையான நீர், சுமந்து தான் ஊற்றப்படுகிறது.விரைவில் சொட்டு நீர் பாசனம் அமைத்து, தென்னைகளுக்கு பாசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்