தண்ணீர் பாலிடிக்ஸ்

நிலத்தடி நீரை தனியாரிடம் தாரை வார்த்து தர துடிக்கும் ஹார்வர்ட் பல்கலைகழக, பொருளாதார நிபுணர்களுக்கு (Montek Singh Ahluwalia) துணை போகும் நம் பிரதமரை சாடும் தினமணியின் தலையங்கம்

தலையங்கம்: வேண்டாமே…

நிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும், குடிநீருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தில்லியில் நடைபெற்ற இந்திய நீர் வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது, மத்திய அரசு நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சிலரால் சுரண்டப்படுகிறது என்பதிலும், குடிநீருக்கு அதிக விலை வைத்து மக்களைச் சுரண்டுகிறார்கள் என்பதிலும் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கவே முடியாது. உலகளாவிய அளவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை என்கிற நிலையில், குடிநீர் உபயோகத்துக்குக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் சிக்கனமாகத் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்கிற சிந்தனையிலும் தவறு காண முடியாது. அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டால், மத்தியதர வகுப்பினரும், அடித்தட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள், பணக்காரர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கும்.

குடிநீர் வணிகத்தில் ஆளாளுக்கு அநியாய விலை நிர்ணயம் செய்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பிரதமரே, இதற்குச் சரியான சட்டங்கள் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டங்கள் இயற்றி அதை முறைப்படுத்துவதற்குத்தானே நாம் ஒரு பிரதமரைப் பதவியில் அமர்த்தி இருக்கிறோம். அவருக்கு அதுகூடவா தெரியாது?

நிலத்தடி நீரில் 70 விழுக்காடு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லும் பிரதமர், இந்தத் தண்ணீரை விவசாயிகள் சரியான நீர்மேலாண்மை இல்லாமல் வீண் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏன் இத்தனைக் காலமாக ஏற்படுத்தவில்லை என்பதற்கான விடையைச் சொல்ல வேண்டியவர் பிரதமர்தான்.

12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், நிலத்தடி நீர் கொள்கை அறிவிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மீது கட்டுபாடு விதிக்கும் சட்டங்கள் அமலுக்கு வரும்போதுதான், பிரதமரும் மத்திய நீர்வளத் துறையும் குறிப்பிடும் தனியார் விவசாயம் என்பதற்கான விரிவான விளக்கம் கிடைக்கும்.

இந்தத் தனியார் விவசாயம் என்பதில் பணப்பயிர், மக்களுக்கான தானியம் மற்றும் உணவுப் பயிர்கள் என்று பாகுபடுத்தப்படும் என்று பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களிலும் அழகுச் செடிகள் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்குத் தனி விலை வைக்கக் கூடும் என்றும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இதுவரை, இத்தகைய தனியார் விவசாயம் எது என்பது அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

நிலத்தடி நீர் பொதுச் சொத்து என்று அறிவித்தால், தற்போது வீடுகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு அதன் பயன்பாடு அல்லது ஆழத்துக்கு ஏற்ப, அதாவது மின்சாரப் பயன்பாட்டுக்கு எப்படி வீடு, வணிகம், தொழிற்சாலை என்று பிரிக்கப்படுகின்றதோ அதேபோல பிரிக்கப்பட்டு, அளவுகள் தீர்மானிக்கப்படலாம்.

நிலத்தடி நீர்ப் பயன்பாட்டில் தற்போதைய சட்டதிட்டங்களில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்று குறிப்பிடும் பிரதமர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகின்றன என்பதை ஏனோ குறிப்பிடவில்லை.

விவசாயி தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினாலும் வீணாகும் நீர் மண்ணுக்குள் செல்கிறது.ஆனால், குடிநீர் நிறுவனங்கள் உறிஞ்சும் நீர் ஒவ்வொரு துளியும் காசாகின்றது.

ஆனால், விவசாயி நிலத்தடி நீரை வீணாக்குகிறார் என்று கருதும் அரசு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்கிற பெயரில் முறையான பரிசோதனைக்கு உள்படுத்தப்படாத தண்ணீரை அநியாய விலைக்கு விற்று லாபம் கொழிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லையே, அது ஏன்? இவை பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்புடையவைகளாக இருப்பதாலா?

மண்ணுக்கு அடியில் இருக்கும் கனிமங்கள் மற்றும் தொன்மைப் பொருள்கள் அரசுக்குச் சொந்தமானவை என்று ஏற்கெனவே அரசுச் சட்டங்கள் இருக்கின்றன. இது அகழாய்வுக்கும், மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் தொன்மை பொருள்களுக்கும் தனிநபர் உரிமை கொண்டாட முடியாது என்பதற்காக உள்ள சட்டம். இப்போது இந்தச் சட்டத்தின் கீழ், தண்ணீரையும் சேர்க்கப் போகிறார்கள்.

நிலத்தடி நீரை வீடுகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் எப்படி எந்த அளவு பயன்படுத்தலாம், அதற்கான கட்டணம் என்ன என்பது அரசு சட்டம் இயற்றிய பிறகு மெல்ல அறிவிக்கப்படும். இதற்கு நாள் ஆகலாம். ஆனால், இப்போதே அனைவரும் விழிப்புடன் இதுதொடர்பான விளக்கங்களைக் கேட்டு, தெளிவான அணுகுமுறையுடன் சட்டத்தை எதிர்கொள்வது அவசியம். ஆகவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.

உலகில் நன்னீர் அளவு கடலை ஒப்பிடுகையில் வெறும் 3 விழுக்காடுதான். மற்ற நாடுகளில் நன்னீருக்குத் தட்டுப்பாடு இருக்கின்றது. ஆனால், ஜீவநதிகளான கங்கையும், பிரம்மபுத்திராவும், சிந்துவும் பாயும் இந்தியாவில் இதற்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், கட்டுப்பாடும் விலை நிர்ணயமும் தனியாருக்கு லாபம் தருமே தவிர, அரசுக்குக் கருவூலமும் நிரம்பாது.

மக்களின் தண்ணீர் பயன்பாடும் குறையாது.  வானம் பொழிகிறது, நிலத்தடிநீர் பெருகுகிறது.. உனக்கேன் கட்டணம் செலுத்த வேண்டும்? என்று நாம் கேட்டால் அதில் தவறில்லை. நாளை கேட்கப் போவதை, இன்றே கேட்டு விடுவோமே…

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *