சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.
முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.
தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.
இரு தன்மைகள்
- திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.
- பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும்.
- சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.
- பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.
பரிசோதனை செய்வது எப்படி
- கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.
- சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.
- கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
- பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.
- பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.
கட்டணம் எவ்வளவு?
- பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
- நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்