நீர் மேலாண்மையில் அசத்தும் இயற்கை விவசாயி!

நீர் மேலாண்மை‘ பற்றிய விழிப்பு உணர்வு இன்று யாருக்குமே இல்லை. அரசுக்குக்கூட அதைப்பற்றி அதிகம் அக்கறையில்லை என்று சூழலியலாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், தனது வயலில் ‘நீர்மேலாண்மை’ பற்றி வாசகங்கள் கொண்ட பலகையை வைத்து, விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஊட்டி வருகிறார் இயற்கை விவசாயி ரவி.

'நீர்மேலாண்மை' பற்றி வாசகங்கள் கொண்ட பலகை

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குள்ளமாப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ரவி. பட்டுக்கோட்டையில் தொழில் செய்து வரும் இவர், நம்மாழ்வார் மீது உள்ள ஈடுபாட்டால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குள்ளமாப்பட்டியில் 20 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். வானம் பார்த்த பகுதியான இந்தப் பகுதியில், எங்கு பார்த்தாலும் வறட்சியின் கோரத்தாண்டவம். ஆனால், இவரது வயல்கள் மட்டும் பச்சைப் போர்த்தி உள்ளன. காரணம், இவர் மேற்கொள்ளும் ‘நீர் மேலாண்மை’தான். கிணறு வெட்டி அந்தத் தண்ணீரை பெரிய தொட்டியில் சேமித்து வைத்துக்கொள்கிறார். அதை கொஞ்சம்கொஞ்சமாக வயல்களுக்கு சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்.

இயற்கை விவசாயி ரவி

மழை நீரை சேமிக்க வயல்களைச் சுற்றி பண்ணைக் குட்டைகளை அமைத்துள்ளார். ஒருசொட்டு நீரைகூட வீணாக்காமல் திறமையாக நீர் மேலாண்மை செய்து வெள்ளாமை மேற்கொண்டு வருகிறார். தான் செய்யும் நீர் மேலாண்மை முறையை மற்ற விவசாயிகளும் பின்பற்றி வெற்றிகரமான வெள்ளாமை செய்ய வேண்டும் என்பதற்காக நீர் மேலாண்மை பற்றிய குறிப்புகளை கொண்ட பலகையை வயலைச் சுற்றி மாட்டி வைத்திருக்கிறார்.

அதில், நிலத்தில் விழும் மழைநீரை சேமித்தல், ஆழ்குழாய்க் கிணறுகளை தவிர்த்தல், பணப்பயிர்களை தவிர்த்து மானாவாரி பயிர்களுக்கு மாறுதல், மூடாக்கு முறைக்கு மாறுவது, பண்ணைக் குட்டை அமைத்தல், மழையை ஈர்க்கும் மரங்களை வளர்த்தல், பொதுக் குளங்களை தூர்வாருதல் என்று எழுதப்பட்டுள்ளது.

ரவியிடம் பேசினோம்.

“பணப்பயிர்கள் செய்வதும், ஆழ்குழாய்கள் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்து கண்டப்படி உபயோகிப்பதும்தான் அதிக வறட்சி ஏற்படுவற்கு காரணம். நம்மாழ்வார்கிட்ட நான் கற்றுக்கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்று. நான் என் பண்ணையில் மானாவாரிப் பயிர்களையே போட்டுள்ளேன்.

80 சதவிகிதம் மழைநீரையே பல்வேறு வழிகளில் வயல்களைச் சுற்றி சேமித்து, விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறேன். அதனால், என் வயல்களில் வெள்ளாமை நீர் இன்றி காய்ந்ததில்லை.

இந்தப் படிப்பினை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் இப்படி பலகையில் எழுதிப் போட்டுள்ளேன். விரும்பும் விவசாயிகளை பண்ணைக்கு வரவழைத்து, நீர்மேலாண்மை பற்றி விளக்குகிறேன்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *