பயிர் வளர நீர் தேவையில்லை, ஈரமே போதுமானது – பயிர்களுக்கு நீர் தேவை. அதேநேரம் ஈரப்பதமே பயிர்களை வளர்க்கப் போதும். ஈரப்பதம் காப்பதில் முக்கிய முறையான பனி அறுவடை பற்றி பார்ப்போம். மழையைத் தவிர்த்து நமக்கு நீர் கிடைக்கும் வழிமுறையில் பனிப்பொழிவும் இன்றியமையாதது. பனியை அறுவடை செய்யும் நுட்பங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
பனிநீர் சேகரிப்பு
சித்த மருத்துவர்கள் பனி நீரைச் சேகரிக்க வெள்ளை வேட்டிகளைப் பயன்படுத்துவார்கள். மார்கழி, தை மாதங்களில் தூய வேட்டிகளை இரவு நேரங்களில் புல்வெளிகளில் பரப்பி வைப்பார்கள். அந்தத் துணியில் பனி நீரானது நன்கு இறங்கி இருக்கும். அதிகாலை வேளையில் அவற்றைச் சேகரித்துப் பெரிய கலங்களில் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்வார்கள். இந்தத் தூய நீரை மருந்து செய்யப் பயன்படுத்துவார்கள்.
ஆகப் பனியிலிருந்து ஈரத்தைச் சேகரிக்க முடியும். பனியிலேயே வளரும் பயிர்களில் ஒன்று பனி வரகு என்ற சிறுதானியம். பனியால் வளர்வதாலேயே அந்தத் தானியம் அந்தப் பெயரைப் பெற்றது.
பனித்துளி பனித்துளி
பனிப் பொழிவை இரண்டாகப் பிரிக்கலாம். பனித்துளிகள் (dew) மூலம் கிடைக்கும் பனிப்பொழிவு ஒருவகை. மற்றது பனிமூட்டத்தால் கிடைக்கும் பனிப்பொழிவு. இரவு நேரத்தில் நிலம் வேகமாகக் குளிர்ந்து ஈரக்காற்று நீர்த்திவலைகளை உருவாக்கும் முறையால் கிடைப்பது பனித்துளி. நெய்தல் நிலப்பரப்பிலும், மலைப் பரப்புகளிலும் இவற்றை நிறைய பார்க்கலாம். வானம் மேகங்களின்றித் தூய்மையாக வெறும் வானமாகக் காணப்படும் இடங்களில் இப்படிப்பட்ட பனித்துளிகள் தோன்றும்.
அதேநேரம் காற்றின் வேகமும் குறைவாக இருக்க வேண்டும். விரைவாக நிலம் குளிர்ந்தாலும்கூடக் காற்று விரைவாக வீசும்போது பனித்துளி ஆவியாகிவிடும். அதாவது காற்றின் வேகம் மணிக்கு ஒன்று முதல் ஐந்து கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் காய்ந்த தரையின் மீது பனித்துளியின் அளவு கூடுதலாகவும், நீர் பாய்ந்த ஈரத் தரையின் மீது பனித்துளியின் அளவு குறைவாகவும் இருக்கும்.
பாலையில் 50 மி.மீ.
இலைப் பரப்புகளின் மீது மழைக் காலத்தில் அல்லது மேகமூட்டம் உள்ள காலத்தில் காணப்படும் பனித்துளியானது, நிலத்தில் உள்ள ஈரப்பதத்தால் உருவாவது. அதேநேரம் இலைகளில் ஏற்படும் நீராவிப் போக்கும் சிறிதளவு பனித்துளிகளை உருவாக்கும். இது இலை நுனிகளில் மட்டுமே இருக்கும். அதேநேரம் பனித்துளி என்பது இலைப் பரப்பு முழுவதும் பரவிக் காணப்படும். இதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பாலை நிலங்களில்கூட 50 மில்லி மீட்டர்வரை பனித்துளிப் பொழிவு கிடைக்கிறது.
ஆகவே, பனி அறுவடை என்பது பண்ணைக்கு மிகவும் அவசியமான ஒன்று. தமிழகத்தைப் போன்ற வறண்ட நிலப்பரப்புகளைக் கொண்ட பகுதிகளுக்கு அவசியமானது.
எப்படிச் சேகரிப்பது?
கற்களைக் கொண்டு மூடாக்கு அமைத்துப் பனியை அறுவடை செய்யலாம். கல் மூடாக்கு என்பது உடைந்த கற்களை மரத்தைச் சுற்றி ஒன்றின் மீது ஒன்றை அடுக்கி உருவாக்குவது.
மரத்தைச் சுற்றிக் காய்ந்த சருகுகளை மூடி வைத்துப் பனியை அறுவடை செய்யலாம். வீணாகும் பழைய பருத்தித் துணிகள் பனியின் ஈரத்தைக் கவரும் திறன் கொண்டவை.
பயிரைச் சுற்றிக் கிண்ணம்போலப் பெரிய குழிகளை உருவாக்கி, அவற்றின் உள்ளே சருகுகளை இட்டு மரக் கன்றுகளை நடும்போது அவை போதிய அளவு ஈரத்தைப் பெற்றுக்கொள்கின்றன.
பனிமூட்டம்
அடுத்தாகப் பனிப்பொழிவில் பார்க்க வேண்டியது பனி மூட்டம் (fog) எனப்படும், வெப்ப நீர் குளிர்வதால் ஏற்படும் பனிப்பொழிவு. நீர்நிலைகளில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாகக் காற்றில் தோன்றும் பனிமூட்டமும், வெப்பக் காலத்தில் பெய்யும் மழையானது நின்ற பின்னர், காற்றில் ஏற்படும் பனிமூட்டமும் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றையும் மூடாக்கு உத்திகள் மூலம் சேகரிக்கலாம். தென்னாப்பிரிக்காவில் லனாய் என்ற இடத்தில் 1,270 மில்லிமீட்டர் பனிமூட்டம் கிடைப்பதாக ‘சங்க்’ என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
எனவே, மண்ணின் ஈரத்தைக் காக்கும் நடவடிக்கைகளில் பனித்துளிகளும், பனிமூட்டமும் சிறப்பான பங்கை வகிக்கின்றன என்பதை மறந்துவிடாமல் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்