பயிர்களை வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வழிகள்

தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள ராகி, சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப் பயறு மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட தொழில்நுட்ப அறிவுரைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பாப்பாரப்பட்டி பகுதி வேளாண் அறிவியல் நிலையம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நிலையத்தின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் ம. சங்கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாக ராகி, சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப் பயறு, பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது போதுமான அளவு மழை கிடைக்காமையால் பயிர்கள் வறட்சியால் காய்ந்து வாட்டத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், பயிர்கள் முற்றிலும் காய்ந்துவிடாமல் வறட்சியிலிருந்து பாதுகாக்க திரவ மெத்தைலோ பாக்டீரியம் (பிபிஎப்எம்) நுண்ணுயிர் உரம் ஒரு சதவிகித கரைசலை, அதாவது 100 மி.லி. திரவ நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மீது நன்றாகப்படும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

இவ்வாறு 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியினால் காய்ந்துவிடாமல் ஒரு வார காலத்துக்கு உயிரோட்டமாக வைத்திருக்க முடியும். இவை பயிர்களின் இலையின் மேற்பரப்பில் “ஆஸ்மோபுரடெக்டன்ஸ்’ எனப்படும் சர்க்கரை, அமினோ அமிலங்கள், ஆல்கஹால் ஆகியவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் வறட்சி, அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன.

இந்த நுண்ணுயிர் உரத்தை தெளிப்பதால் பயிர்களின் இலைப்பரப்பு, இலைத் துளைகளின் எண்ணிக்கை, பச்சையம் அல்லது குளோரோபில் நிறமியின் செறிவு ஆகியவற்றை அதிகரிப்பதன் வாயிலாக ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்தி மகசூலை 10 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

இந்த நுண்ணுயிர் உரத்தை அனைத்து வகைப் பயிர்களுக்கும் உபயோகிக்கலாம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளைக் கலந்து பயன்படுத்தக் கூடாது.

நுண்ணுயிர் உரம் கிடைக்காதபட்சத்தில் பொட்டாசியம் குளோரைடு ஒரு சதவிகித கரைசலை அதாவது 100 கிராம் பொட்டாஷ் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களின் மீது நன்றாகப்படும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பொட்டாஷ் உரத்திலிருந்து கிடைக்கும் சாம்பல் சத்தானது பயிர்களின் இலைப்பரப்பிலுள்ள இலைத்துளைகளின் செயல்பாட்டை ஒருங்கிணைப்பதால் பயிர்களில் இருந்து நீர் ஆவியாதலைக் கட்டுபடுத்தி வறட்சியால் காய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவுகிறது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *