பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்

நீர் ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதது, பாசனக் கட்டமைப்பு மேம்பாடு அடையாதது போன்ற காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான் இதுவரை பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம் மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது 8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது. சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.

அழிந்து போன கிணற்றுப் பாசனம்: 90 சதவீத இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில் கிணற்றுப்பாசனத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன.


சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம் ஆதாரமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன. மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.

பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் உள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற பராமரிப்பு வேலைகள்தான். நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும். நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம் வரையிலான மண் மேல்மண் என வரையறுக்கப்படுகிறது.பெரும்பாலான தாவரங்கள் இம் மேல் மண்ணில் இருந்துதான் தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்டச் சத்துகளை எடுத்துக் கொள்கின்றன.

மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதிலும் மேல்மண் முக்கியப் பங்கு வகிக்கிறது. வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான மேல்மண்ணும் வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும் மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு, நீர்த்தேக்க அணைகளில் வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது.

இதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. மேலும் நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது. எனவே, வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக் கிளறாமல் தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்க முடியும்.
திட்டங்கள் யாருக்காக: 2050-ஆம் ஆண்டில் தற்போதுள்ளதை விடக் கூடுதலாக 57,725 மில்லியன் கன மீட்டர் நீர் தேவைப்படும் என மதிப்பீடு செய்துள்ள நிபுணர்கள் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களையும் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் முன்மொழிந்து அறிக்கையாகக் கொடுத்தனர்.

இதில் நிலத்தடி நீர் வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப் பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவு நீர் குட்டைகள், சம மட்டக் கரைகளை அமைப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும் முற்றாகத் தடை செய்ய வேண்டும்.

மேலும், விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை உருவாக்குவது, நீண்ட கால அடிப்படையில், சேதமடைந்த வனக் காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, விவசாய நிலங்களில் உரம், பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது, ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில்தான், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம், தேசிய நீர்ப்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம் ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையத்தை அமைத்தது. இவற்றின் வாயிலாக தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக 20,000 நீர்தேக்கங்கள்(குளம், குட்டைகள்) ஏற்படுத்தப்பட்டன. இதில் பெரும்பாலானவை இப்போது பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்பாடு அடைந்ததாகவோ, விவசாயம் வளர்ச்சி அடைந்ததாகவோ கண்டிப்பாகக் கூற முடியாது.

தொடரும் நீர் மாசுபாடு: 1960-களில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு இப்போது 16 சதவீதமாக சுருங்கிவிட்டது. தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் அரசுதான் கூறுகிறது.

விரக்தி நிலையில் விவசாயிகள்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தது:
இயற்கை வளங்களை முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை. நீண்ட காலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது. தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன.

தமிழக நில ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 1965, 1975, 1996, தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 2007 என பல சட்டங்களும் இருக்கின்றன. இருப்பினும் இந்தச் சட்டங்கள், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயல்படுத்தப்பட்ட மாற்றுத்திட்டங்கள் எல்லாம் நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை வளப்படுத்தவோ உதவவில்லை.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *