பாசனநீரை ஆய்வு செய்து உரச்செலவை குறைக்கலாம்

பாசனநீர் மற்றும் மண் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால், சாகுபடியில் உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்,என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாசன நீரைப் பெறுவதற்காக அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதில் ஆயிரம் அடிவரை கூட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, தரம் குறைந்த மிகக்குறைவான நீரையே பெறும் நிலையுள்ளது.

இப்படி பலதரப்பட்ட பிரச்னையில் பெறும் தண்ணீரை, உரியமுறையில் ஆய்வு செய்து அதன் துணையோடு பயிர் செய்தால், பாதிப்புகளை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.

பாசன நீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கரைந்துள்ளன.

சத்துகளின் அளவு சரி விகிதத்தில் இருக்குமானால், பயிர் வளர்ச்சிக்கு உதவும். உப்பின் நிலை அதிகமாக இருப்பின், பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் மண்ணின் தன்மையை காலப்போக்கில் மாற்றிவிடும்.

  • நாம் பயன்படுத்தும் பாசன நீரில் பொட்டாசியம் தேவையான அளவில் இருப்பின், பொட்டாஷ் உரஅளவை குறைத்து கொள்ளலாம். உதாரணமாக பாசன நீரில் 30 பி.பி.எம்., பொட்டாஷ் இருந்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு முறை 2 செ.மீ., அளவு நீர் பாய்ச்சினால் 80,000 லிட்டர் நீர் பாயும்.இதில் பொட்டாஷியத்தின் அளவு 2.4 கிலோ இருக்கிறது.ஒரு ஏக்கர் வாழைபயிருக்கு 50 முறை நீர் பாய்ச்சினால் 120 கிலே பொட்டாஷ் நிலத்தில் சேர்கிறது.நாம் உபயோகிக்கும் பொட்டாஷ் உரத்தில் 120 கிலோவை குறைத்து கொள்ளலாம். இதன் இன்றைய மதிப்பு 15000 ரூபாய்.
  • இதனால் தேவையான அளவு பொட்டாஷ் பயிருக்கு கிடைப்பதுடன் மண்ணில் வீணாவது தடுக்கப்படுகிறது.
  • சோடியம் உப்பு அதிகமாக இருக்கும் பாசனநீரை தென்னை, பருத்தி, பீட்ரூட் போன்ற சோடியத்தை அதிகமாக உட்கொள்ளும் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • மெக்னீசியம் உப்பு அதிகமாக இருப்பின் தக்காளி, கறிவேப்பிலை போன்ற பயிர்கள் பயிரிடலாம். கால்சியம் அதிகம் இருப்பின் நிலக்கடலை, கத்திரி போன்ற பயிர்களை தேர்வு செய்யலாம்.மண்ணின் இயற்பியல் பண்புகளான மண்நயம், நீர் உட்புகும் தன்மை, வடிதிறன் ஆகியவற்றை பொறுத்து பாசனநீரை பயன்படுத்தலாம்.
  • பாசன நீரில் அதிக உப்புகள் இருந்தால் மணற்பாங்கான நிலங்களுக்கு பாய்ச்சுவதன் மூலம் உப்பின் கடுமையை குறைக்கலாம்.
  • இம்மாதிரியான நிலத்தில் பயிரின் வேர்ப்பகுதியில் நீர் அதிகம் தேங்காமல் விரைவாக வெளியேறி, உப்பில் பாதிப்பில் இருந்து பயிர் காப்பாற்றப்படுகிறது.
  • ஆனால் களிமண் போன்ற மென்மையான மண்ணில் அதிக நேரம் நீர் தங்குவதால், பயிரில் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.
  • உப்புநீரை ஒரே சமயத்தில் அதிகமாக பாய்ச்சாமல், குறைந்த இடைவெளியில் குறைவாக பாய்ச்சுவதால், உப்பின் பாதிப்புகளை 10 சதவீதம் குறைக்கலாம்.
  • மழைநீர் உப்புகள் இல்லாமல் தூய்மையாக இருக்கும். ஆண்டு முழுவதும் நிலத்தில் படிந்துள்ள உப்புகளை, மழைநீர் வெளியேற்றும் தன்மை கொண்டது.

கூடுதல் தகவலுக்கு வேளாண் துறையின் கீழ் இயங்கும் “மண்வகையீடு மற்றும் நிலப்பயன்பாடு’ நிறுவனத்தின் மூத்த வேளாண்மை அலுவலரை (09442516641) அணுகி, ஆலோசனைகளை பெறலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *