மானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை!

பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், பாசன கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில், ஆழ்குழாய் கிணறுகள் குடிநீருக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டு நீர் பாசனத்துக்கும் கைகொடுத்து வருகின்றன.

விவசாயிகள், கிடைக்கும் நிலத்தடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியில் சாதித்து வருகின்றனர்.

இந்த வகையில், கிணத்துக் கடவு அடுத்துள்ள அரசம் பாளையத்தை சேர்ந்த வக் கீல் ஜெயபால், அவரது மனைவி சத்யா ஆகியோர் விவசாயத்தைவிருப்பமுடன் மேற்கொண்டுள்ளனர்.

கணவர் கோர்ட்டுக்கு சென்ற பின், மனைவி தான் முழு நேர விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார். இவரது ஆலோசனை மற்றும் உழைப்பால், மேட்டுப்பாங்கான மானாவாரி நிலம் இன்று, பாசன நிலமாக மாறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், யாரும் எதிர்பார்க்காத பயிர்களை சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு தக்காளி சாகுபடி செய்திருந்தார். நடப்பு ஆண்டில், ஒரு ஏக்கர் பரப்பளவில், 800 செவ்வாழை கன்றுகளை நடவு செய்து, தற்போது, 14 மாத வாழையாகஉயர்ந்து நிற்கின்றன.

சொட்டு நீர் பாசனத்தில் வாரம் ஒருமுறை நீர்பாசனம் கொடுப்பதோடு, மாதம் ஒருமுறை நீரில் கரையும் உரத்தையும், வாழையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் கொடுக்கிறார்.

வாழைகளுக்கு இடையே, தென்னங் கன்றுகளை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளார். வாழைக்கு பாசனம் தரும்போது, தென்னையும் பாசனம் பெறுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைத்து, அதில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஒட்டு மொத்த வாழைகளும் குலை தள்ளியுள்ளன. அடுத்த இரு மாதங்களில், செவ்வாழை அறுவடைக்கு வந்து விடும். வாழையை தவிர, இரண்டு ஏக்கரில், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பழைய முறைப்படி, பாத்தி பிடித்து, வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயத்துக்கு பாத்தி பாசனம் கடைபிடிக்கப்படுகிறது

வாழை மற்றும் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ள மண்ணின் அடிப்பரப்பு சுண்ணாம்புக்கல் தன்மை கொண்டது. குறிச்சி குளத்து மண்ணை நிலத்தில் பரப்பி, அதில் விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *