ராதா வாய்க்காலும் ரங்கநாயகியும்!

நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது. வேளாண் அறிஞர்களும் அறிவியலாளர்களும் சேர்ந்து விவசாயத்தை வளப்படுத்திய வரலாறு நம்முடையது. விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ள நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் சிறப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்துவந்த நமது விவசாயிகள், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்காகப் படாத பாடுபடுகின்றனர். பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படியொரு நிலையில்தான் மாற்றத்துக்கான சாவியைக் கையில் எடுத்திருக்கிறார் ரங்கநாயகி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த இவர், விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ரங்கநாயகி, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சுந்தர்ராமனின் கரம்பற்றி மனைவியானதும் விவசாயத்தை மறந்து குடும்பச் சூழலுக்குத் தன்னை மாற்றிக்கொண்டார். திருமணமான சில வருடங்களிலேயே கணவர் இறந்துவிட, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்று வழி தெரியாமல் விழித்தார். அவருடைய தந்தை கொடுத்த ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன் களத்து மேட்டுக்குச் சென்றார்.

தண்ணீர்ப் போராட்டம்

களத்து மேட்டில் நின்று ஒரு பெண் விவசாயம் பார்ப்பதை, கோழி கூவி விடியவா போகுது என்று பலர் ஏளனம் செய்தனர். ஆனாலும் கம்பீரமாய்க் களமிறங்கிய ரங்கநாயகிக்குத் தண்ணீர் வடிவில் சோதனை ஏற்பட்டது. தனது நிலம் மட்டுமல்லாமல் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீர் 9.5 கி.மீ. தொலைவில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மூலம் வந்து சேர வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால், ராதா வாய்க்காலோ ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தது. அதனை மீட்க ரங்கநாயகி நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. இருப்பினும் விடாமுயற்சியோடு போராடிய ரங்கநாயகியின் முயற்சிக்குத் தோள்கொடுக்கத் தொடங்கினர் வடம்பூர் கிராம மக்கள். அதன் விளைவாக ராதா வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது தடையின்றித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கடலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் ரங்கநாயகியை ‘ராதா வாய்க்கால்’ ரங்கநாயகி என்றே அழைக்கின்றனர்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பொன் விளையும் பூமி

“விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். சுமார் 10 கி.மீ நீளமுள்ள ராதா வாய்க்காலில் பல்வேறு ஆக்கிரமிப்புகள். ஒருபுறம் கழிவு நீர், மற்றொரு புறம் சுகாதார நிலையங்களின் மருத்துவக் கழிவுகள் என அந்த வாய்க்கால் எப்போதும் துர்நாற்றம் வீசும். ஏராளமான சுகாதாரச் சீர்கேட்டுக்கும் அது காரணமாக இருந்தது. வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிக்குக் கிராம மக்களும், கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூவும் உதவினர். இதையடுத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு,

தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லும் ரங்கநாயகியின் விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.

“விவசாயம் நஷ்டமான தொழில் என ஒருபோதும் நான் கூறமாட்டேன். பொன் விளையும் பூமியைக் குறை சொல்வது பெண்ணைக் குறை சொல்வதற்குச் சமம். இயற்கை விவசாயத்தை ஒதுக்கிவைத்துவிட்டுக் களைக் கொல்லி, பூச்சிக் கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பூமியைப் பாழ்படுத்தியது நாம்தான். எல்லாவற்றுக்கும் மூலாதாரம் விவசாயம். அப்படிப்பட்ட நிலத்தை விற்கப் போகிறேன் என்று யாராவது சொல்வதைக் கேட்பதைவிட வேறென்ன துயரம் இருக்கிறது?” என்கிறார் ரங்கநாயகி.

தன்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களைப் பற்றி ரங்கநாயகி கவலைப் படவில்லை. மாறாக அந்த ஏளனப் புன்னகையை ஆச்சரியக்குறியாக மாற்றக் கடுமையாக உழைத்தார். விவசாயம் குடும்பத் தொழில் என்பது ரங்கநாயகிக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது.

“விவசாயத்தை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது விவசாயம். விவசாயத்துக்கு முன்னோடி நாம் என்பதில் பெருமை கொள்வோம்” என்கிறார் ரங்கநாயகி!

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *