பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் அனைத்தும் வறட்சியைச் சந்தித்து விட்டன. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் கூடத் தண்ணீர் குறைவாகத்தான் வந்து கொண்டுள்ளது. முதலில் வறட்சி என்றால் ஏதாவது ஒருபகுதியில் சற்று மிகுதியாகவும், ஒரு சில பகுதி சற்று வளமாகவும் இருக்கும். ஆனால் இந்த முறை ஒட்டு மொத்தமாகத் தமிழகம் தண்ணியில்லாத காடுகளாக மாறிவிட்டது. இதனால் கிராமம், நகரம், மாநகரம் என அனைத்து இடங்களிலும் பாரபட்சம் இன்றி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. செழிப்பாகக் காட்சியளிக்கும் கிராமங்களே பாலைவனமாக காட்சியளித்தது. அப்படியென்றால் சென்னையின் நிலையைப் பற்றி நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் ஐந்து நாள், பத்து நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் இந்தமுறை தண்ணீர் பஞ்சத்தின் அவலம் உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கு காரணம் மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டது, அதிகமான மழைநீர் கடலில் கலந்தது, பருவநிலை மாற்றம், நீர் நிலைகளைச் சீரமைக்காமல் இருந்தது எனப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கோடைக்காலம் முடிந்துவிட்டது, பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது, இனிமேல் பிரச்சனை இல்லை என பெரும்பாலோனோர் நினைக்கலாம். கோடைக் காலம் முடிந்து விட்டது தான் ஆனால், அடுத்த கோடைக்கு என்ன செய்வது… இனி வரும் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய வாழ்வாதாரம் ஆரோக்யமான தண்ணீர்தான். அதனால், இந்த பருவமழைக் காலத்திலாவது நாம் அதனைப் பத்திரமாக சேமிக்க வேண்டும். இந்நிலையில் மழைநீரை எந்தெந்த வழிகளில் சேமிப்பது என்று ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர் வடிப்பகுதி மேம்பாடு பொறியாளர் பிரிட்டோராஜ்.
“கடந்த இரண்டு வருடங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகிவிட்டது. அது தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஆனால் அனைத்து மக்களின் தேவைக்கான தண்ணீர் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். அதிகரித்து வரும் மக்கள் தொகையை சமாளிக்கத் தண்ணீரை சேமித்துப் பயன்படுத்துவது அவசியம். அது விவசாய நிலங்களாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் தண்ணீரை எளிதில் சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தலாம். இதற்கு மக்களிடையே போதுமான விழிப்பு உணர்வு இல்லாததே காரணம். பூமியில் விழும் மழைநீரை நிலத்திற்குள் முறையாகச் சேமித்தால், கோடையில் மட்டுமல்ல பருவமழை பொழிந்தாலும், பொய்த்தாலும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் தங்களது வீடுகளில் விழும் மழைநீரை மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்துப் பாதுகாக்கலாம். அந்த மழை நீரையும், வீட்டின் ஆழ்துளைக்கிணறு அமைந்துள்ள இடத்திற்குப் பக்கத்தில் விழுமாறு தொட்டி அமைக்கலாம். இப்படி அமைப்பதால் மழைநீர் எளிதில் நிலத்திற்குள் சென்றுவிடும். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். விவசாய நிலங்களில் நிலத்தின் மூலையில் பண்ணைக்குட்டை ஒன்றை அமைத்து தண்ணீரை சேமித்தால், வறட்சி காலம் பற்றிய கவலை இல்லை. பண்ணைக்குட்டையால் நிலத்தடிநீர் தானாகவே உயர்ந்து கொள்ளும். இதனால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பை பெரும்பாலும் தவிர்க்கலாம். சேமித்த தண்ணீரை பயன்படுத்தும்போது சொட்டுநீர் பாசனம் மூலமாகத் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவதும் குறையும்.
வீடுகளில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவைக் குறைத்து அளவாகப் பயன்படுத்தினாலே போதும். உதாரணமாக, ஷவரில் குளிப்பதற்குப் பதில் வாளியைப் பயன்படுத்தலாம். தண்ணீரை உபயோகத்துக்குக் குவளையில் நீரை அள்ளிப் பயன்படுத்தலாம். விவசாயிகள் அதிக நீரை உறிஞ்சும் பயிர்களை பயிர் செய்வதை விடப் பருவநிலைக்கு ஏற்றத் தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்ளும் பயிர்களைப் பயிரிடலாம். ஒவ்வொரு மனிதனும் நீரைச் சிக்கனமாகவும், சேமித்துப் பயன்படுத்தவும் தொடங்கி விட்டால் எவ்வளவு பெரிய வறட்சியையும் சமாளிக்கலாம். அதற்கு அரசும் ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
நன்றி: ஆனந்த விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்