வறட்சியிலும் வருமானம் கொடுக்கும் பண்ணைக்குட்டை

பண்ணைக்குட்டை

மழை இருக்கும் காலகட்டங்களில் விவசாயத்தில் இருக்கும் லாபமானது கோடையில் இருப்பதில்லை. ஆனால் சில விவசாயிகள் கோடையிலும் வறட்சியைச் சமாளித்து விவசாயம் செய்து வருகிறார்கள். வறட்சியிலும் விவசாயிகள் விவசாயத்தை தொடர வழிசொல்கிறார், திண்டுக்கல் மாவட்ட வேளாண்பொறியாளர் பிரிட்டோராஜ்.

பொதுவாக நீராதாரமாக விளங்கக்கூடியது கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள்தான். இந்தக் கிணறுகளுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்கக்கூடியவை கிணற்றை சுற்றியுள்ள ஊரணி, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள்தான். ஆனால், இந்த நீர்நிலைகள் எல்லாம் பருவமழை இல்லாமல் தற்போது காய்ந்து போய்க்கிடக்கின்றன. இன்றைய மழையும் அதற்கேற்றார் போலவே இருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மழையானது ஒரே சீராக பொழியாத சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. பொதுவாகத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் மழையானது பொழிகிறது. அவ்வாறு மழைபெய்யும் பகுதிகளில் நமது நிலப்பகுதிகளில் சேமித்து வைக்க வேண்டும். இதற்காக மனிதனால் ஏற்படுத்தப்படும் குளம் மாதிரியான அமைப்புதான் ‘பண்ணைக்குட்டை’.

வயலின் நடுவில் பண்ணைக்குட்டை

பண்ணைக்குட்டை என்பது நிலத்தின் ஒரு மூலையில் சதுரம் அல்லது செவ்வகம் என்ற வடிவத்தில் குழியினைத் தோண்டி மழை நீரை நேரடியாகச் சேமித்து, பின்பு தேவை ஏற்படும்பொழுது விவசாயத்துக்குப் பயன்படுத்தக்கூடியதே ஆகும். பண்ணைக்குட்டையானது நீரினை சேமித்து வைப்பதற்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரினுடைய அளவை அதிகரிக்கவும்  பயன்படுகிறது. பொதுவாக பண்ணைக்குட்டை அமைக்கும்போது நிலத்தில் ஓரமாக அமைப்பதால் நிலத்தில் உழுவது போன்ற விவசாய வேலைகளைச் செய்யும்போது அதன் பணிகள் பாதிக்கப்படாது. பண்ணைக்குட்டையை பக்கத்தில் உள்ள அடுத்தவர் நிலத்தின் அருகே அமைக்கக் கூடாது. நிலத்தின் சரிவினை நோக்கியே பண்ணைக்குட்டையானது இருக்க வேண்டும். இந்தப் அமைப்பானது ஒவ்வொருவர் நிலங்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக மூன்று ஏக்கர் நிலமுள்ள ஒருவர் தனது விவசாயம் செழிக்க இதனை அமைப்பது மிக அவசியம்.

புதிதாக அமைக்கப்பட்ட குட்டை

பண்ணைக்குட்டை அமைப்பதால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் முதல் 12 லட்சம் தண்ணீர் வரை சேமிக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு சேமிக்கும் நீரானது நமது நிலத்திலுள்ள கிணறுகளில் சேகரமாகும். இதுதவிர பண்ணைக்குட்டைக்கு அருகில் பயிரிடப்பட்டுள்ள பயிரின் வேர்களுக்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியால் வாடாமல் பாதுகாக்கிறது. பண்ணைக்குட்டைக்கு அருகில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பயிர்களுக்கு மேலே தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும், பயிர் வாடாமல் இருக்கப் பண்ணைக்குட்டை உதவுகிறது.

நிலத்தைக் காற்றோட்டமுள்ள நிலமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பண்ணைக்குட்டையால் பயிரின் வளர்ச்சி நிலைத்து நிற்கும். வாடிப்போகுமோ, பயிர் வளராதோ என்ற கவலை இருக்காது. ஒருமுறை பண்ணைக்குட்டை அமைத்துவிட்டால் அதன்பின்னர் தண்ணீருக்காக அலையும் தேவையே இருக்காது. நிலத்தடிநீரையும் உயர்த்துவதில் பண்ணைக்குட்டைக்கு முக்கியப்பங்கு உண்டு. இதை வேளாண்மைப் பொறியியல்துறை, ஊரகவளர்ச்சி முகமை மற்றும் மீன் வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகள் மூலம் விவசாயிகளுக்கு அமைத்துத் தரப்படுகிறது. இதற்காக அந்தந்த துறையின் சார்பில் 70% முதல் 100% வரை மானியம் வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டையின் தேவைகள் என்பது வறட்சியான காலங்களில் அவசியமான ஒன்று.

மீன் பண்ணை

இதில் வெறும் நீரை மட்டுமே சேமிப்பதை தவிர்த்து மீன்களையும் வளர்க்கலாம். நீர், மீன்கள் என இரட்டிப்பு லாபம் விவசாயிக்குக் கிடைக்கும்.

இதுதவிர பண்ணைக்குட்டைகளைச் சுற்றிலும் பழ மரங்கள் காய்கறிகளைச் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். இதனால் நிலத்தடி நீர் சேர்ந்து பயிரால் லாபம் கிடைக்கும், மீன் வளர்ப்பதாலும் லாபம் கிடைக்கும். விவசாய நிலத்தில் குறைந்தபட்சம் 20 சென்ட் நிலத்தில் பண்ணைக்குட்டை வெட்டி, மழைநீரைச் சேமிக்கலாம். இதற்கு அதிகபட்சம் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும். இந்தப் பண்ணைக்குட்டையானது வறட்சிக் காலங்கள் மட்டுமல்ல, அனைத்துப் பருவங்களிலும் விவசாயிக்கு லாபத்தைக் கொடுக்க வல்லது.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *