வறண்ட நிலத்தில் நான்கு மடங்கு வருமானம்: மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்

மராத்வாடாவில் ஒரு முன்மாதிரி கிராமம்

மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதே பகுதியில் உள்ள ஜாலனா மாவட்டத்தில் உள்ள கடவஞ்சி கிராம மக்களோ வறட்சியைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கிராம உழவர்களின் வருமானம் 700 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது மட்டுமில்லை கடந்த 20 ஆண்டுகளாகவும், குறிப்பாக 2012 வறட்சியின்போதும்கூட அவர்கள் வறட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வளவுக்கும் 2012 வறட்சி, கடந்த 40 ஆண்டுகளில் மிக மோசமானது.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது? இது அதிசயமாக அல்லவா இருக்கிறது. தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு அரசுத் திட்டம் மூலம் வறட்சியை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும், விவசாயி களின் வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என்பதற்குமான சிறந்த எடுத்துக்காட்டு கடவஞ்சி கிராமம்.

குறையும் பாதிப்பு

1996-க்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை வறட்சியால் பாதிக்கப்படும் தன்மை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. ஏனென்றால், அந்த ஆண்டுதான் கடவஞ்சி நீர்ப்படுகை மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் வறட்சியின் காரணமாக ஊரில் இருந்த விவசாயிகள் அனைவரும் பயிர்கள் பொய்த்துவிட்டதாகக் கூறிவந்தனர். 2013-லோ பயிர்கள் பொய்ப்பது 23 சதவீதமாகக் குறைந்திருந்தது.

காரணம் இந்த ஊரில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் நீரைச் சேகரிக்கின்றனர், மண் வளத்தைப் பாதுகாக்கின்றனர், பண்ணைக் குட்டைகளை அமைக்கின்றனர். அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவான 730 மி.மீ.க்குப் பொருந்தும் வகையிலான பயிரிடும் முறையை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கின்றனர்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

உந்துதல் பெற்ற விவசாயிகள்

தேசிய நீர் சேகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடவஞ்சி கிராமத்தில் நீர்ப்படுகை மேம்பாட்டுத் திட்டம் 1996-97 முதல் 2001-02 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ. 1.2 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அருகிலுள்ள காட்டின் ஒரு பகுதியில் சிற்றணைகள், வயல்களைச் சுற்றி அகழியைப் போன்ற குழிகள், மரங்களை நட்டு – இந்த முறைகள் எவ்வளவு சிறப்பாக வறட்சியை எதிர்க்கின்றன என்பது கிராம மக்களுக்குக் காட்டப்பட்டது. இந்த முறைகள் நீர் வழிந்தோடுவதைத் தடுத்தன, மண்ணுக்குள் நீர் இறங்குவதை அதிகப்படுத்தின, அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

அதன் காரணமாக அருகிலுள்ள கிணற்றில் நீர் மேலேறியது. இரண்டு ஆண்டுகளில் சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் ஊறியது, மண்ணில் ஈரப்பதம் உயர்ந்தது. “இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறியும் உந்துதல் உள்ளூர் உழவர்களிடையே ஏற்பட்டது” என்கிறார் விஷ்ணு பாபுராவ் என்ற விவசாயி. இவருடைய தற்போதைய ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம். இந்தத் திட்டத்தின் காரணமாக இந்த ஊரின் மொத்தப் பயிரிடும் பரப்பில் 150 ஹெக்டேர் அதிகரித்திருக்கிறது.

லட்சாதிபதி

தண்ணீர்ப் பஞ்சம் விடைபெற்றவுடன் திராட்சை, அரிசி, கோதுமை போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உழவர்கள் தைரியமாகப் பயிரிட்டனர். அதற்கு உதவும் வகையில் சொட்டுநீர்ப் பாசனத்தையும் பண்ணைக் குட்டைகளையும் விவசாயிகள் உருவாக்கினர். இந்தக் குட்டைகளில் மழைநீர் சேகரமாகி, ஆண்டு முழுவதும் நீரைத் தருகின்றன. இந்த ஊரில் 2015-ல் இருந்த மொத்தப் பண்ணைக் குட்டைகளின் எண்ணிக்கை 315.

2012-ம் ஆண்டில் மத்திய வறண்டநில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Dryland Agriculture – CRIDA) மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, இந்தப் பகுதியில் உழவர்களின் ஆண்டு சராசரி வருமானம் 1996-ல் ரூ. 40,000 ஆக இருந்தது. 2012-ம் ஆண்டில் இது ரூ. 3.2 லட்சமாகக் கிட்டத்தட்ட 700 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணிப்புப்படி உழவர்களின் தேசிய சராசரி ஆண்டு வருமானம் ரூ. 72,000தான். அப்படிப் பார்த்தால் கடவஞ்சி உழவர்களின் வருமானம் தேசியச் சராசரியைவிட நான்கு மடங்கு அதிகம். இப்போது இந்த ஊரில் ஒவ்வொரு பரம்பரையிலும் குறைந்தது ஒரு லட்சாதிபதியாவது இருக்கிறார்.

இந்தத் திட்டத்தைக் கிருஷி விஞ்ஞான் கேந்திரா நிறுவனம் சார்பில் தலைமை வகித்துச் செயல்படுத்தியவர் வேளாண் விஞ்ஞானி பண்டிட் வாஸ்ரே. “இந்தத் திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்குக் காரணம், இந்தத் திட்டங்களை மக்கள் தங்களுடையதாக நினைத்துச் செயல்பட்டதுதான். அதன் காரணமாகத்தான் திட்டம் நிறைவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும், திட்டத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் இன்னமும் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன,” என்று பெருமைப்படுகிறார் வாஸ்ரே.

நன்றி: டவுன் டு எர்த்
தமிழில்: நேயா

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *