விவசாயத்திற்கு சூரியஒளி மின்சாரம்

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நெல் விவசாயம் செய்தவர்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையால் மாற்று விவசாயத்திற்கு மாறியும், மின்தடையால் பல பிரச்னைகளை சந்தித்த இவர்கள், சூரியஒளி மின்சாரம் பயன்பாடுக்கு மாறி வருகின்றனர் .

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகள் மூலம் மலையடிவாரத்திற்கு வருகிறது. அங்கிருந்து ஆறுகள் மூலம் கண்மாய்களில் தண்ணீர் வந்து சேர்கிறது. ஒரு கண்மாய் நிறைந்தவுடன் மற்றவற்றிற்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் அமைப்பு இருந்தது. கண்மாய் பாசனத்தில் நெல், கரும்பு, வாழை, மா, பலா உற்பத்தி செய்தனர். தற்போது ஆறுகள் குறுகியது. வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியவில்லை. கண்மாய்களும் முறையாக தூர்வாராததால் மழையால் கிடைக்கும் தண்ணீரும் வீணாகிறது. கண்மாய் பாசன நிலங்கள் பல இடங்களில் பிளாட்டுகளாக மாறின. சில இடங்களில் கருவேல முள் மரம் வளர்ந்து உள்ளன. இதனால் நெல் விவசாயத்தில் இருந்து மாற்றுமுறை விவசாயத்திற்கு பலர் மாறினர்.தோப்பு அமைத்து மா, தென்னை, வாழை, பலா விவசாயத்தில் ஈடுபட்டனர். இதற்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை என்பதால் விவசாயிகள் கவலை இல்லாமல் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த வகை விவசாயத்திற்கு மின்தடை மூலம் ஆபத்து வந்தது.

கிணற்று தண்ணீரை மின்மோட்டார் வைத்து சப்ளை செய்யும்போது திடீரென மின்தடை ஏற்படும். கடைசி வரை தண்ணீர் செல்லாததால் கடைகோடியில் உள்ள மரங்கள் வாடின. சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் ஈடுபட்ட போதும் இது போன்ற பிரச்னையை சந்தித்தனர். இது தவிர மின்தடை ஏற்படும்போது தோப்பில் இருக்கும் விவசாயிகள் நகருக்கு உர மூடை, விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்வர். இதை பயன்படுத்தி மின்மோட்டார் திருட்டு நடந்தது. மின்கம்பத்தில் இருந்து மின்மோட்டாருக்கு வரும் ஒயரை துண்டித்து கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை ஒரு கும்பல் திருடியது. மின்மோட்டார், ஒயர், எலக்ட்ரீசியன் கூலி என பல ஆயிரம் ரூபாய் செலவை விவசாயிகள் சந்தித்தனர். அடிக்கடி ஏற்பட்டதால் விவசாயிகள் நொந்துபோயினர்.

மின்தட்டுப்பாட்டை சமாளித்து விவசாயத்தை காப்பாற்றும் கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இதற்காக தோப்புகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் “பிளான்ட்’ அமைக்க துவங்கி உள்ளனர். தோப்பில் இந்த பிளான்ட் அமைத்து கிணற்றில் இருந்து தண்ணீரை தாராளமாக பாய்ச்சுகின்றனர். மின்மோட்டார் அறை அமைத்து அதற்கான மின் தேவையையும், இந்த பிளான்ட் மூலம் பெறுகின்றனர். மின்தடை, குறைந்த மின் சப்ளை போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

ராஜபாளையம் பொன்னுச்சாமி, “” மின்தட்டுப்பாடால் விவசாயம் பாதித்தது. இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து யோசித்தபோது தான் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்தேன். 80 சதவீத அரசு மானியத்துடன் விவசாய பொறியியல் துறை உதவியுடன் சூரிய ஒளி மின் பிளான்ட் தோப்பில் அமைத்தேன். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்செலுத்தினால் நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியமாக கிடைத்தது. வெயில் காலத்தில் தான் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், அப்போது தான் மின்தட்டுப்பாடும் அதிகமாக இருக்கும். இந்த இரண்டையுமே சூரிய ஒளி மின்சக்தியால் எளிதாக சமாளிக்கலாம், ” என்றார்.

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *