விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.
காலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.
ஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
நுண்ணீர் பாசனம்:
இதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார்.
இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
- விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.
- அப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன்.
- அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
- வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது.
- இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.
- பயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது.
- மேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.
- இதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார்.
- இவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச்சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
திரு தனஞ்செயன் அவர்களின் முகவரி தொலைபசி எண் கிடைக்க உதவவும்