பாரம்பரியத்தை பாதுகாக்க சிவகங்கையைச் சேர்ந்த பெண் விவசாயி இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்துள்ளார்.
இந்தியாவில் காட்டுயானம், காட்டுப் பொன்னி, வெள்ளைக்கார், கம்பஞ்சம்பா, சிவப்பு குருவிக்கார், செம்பாளை, கவுனி, மாப்பிள்ளைச் சம்பா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன. இவை இயற்கை உரங்களால் விளைந்த இந்த ரகங்கள் ரசாயன உரங்களுக்கு ஈடுகொடுக்கவில்லை. மேலும் நீண்டகால பயிர் என்பதால் காலப்போக்கில் விவசாயிகள் புதிய ரகங்களுக்கு மாறினர்.
தற்போது மீண்டும் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மாறி வருகின்றனர்.
‘மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகம் தனித்துவம் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.
அபூர்வமாக மாறிவிட்ட இந்த ரக நெல் ரகத்தை சிவகங்கையைச் சேர்ந்த விவசாயி தனலட்சுமி பாண்டி இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார்.
அவர் அரை ஏக்கரில் பயிரிட்டுள்ளார். நெற்பயிர்கள் ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளனர்.தனலட்சுமி பாண்டி கூறியதாவது:
- உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் மாப்பிள்ளை சம்பாவில் உள்ளன.
- அரிசி சிவப்பாக தான் இருக்கும். அதை தான் நாங்கள் சாப்பிடுகிறோம். ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.
- அரை ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். முதலில் நாற்றங்கால் அமைத்து விதை பாவி, 35 நாட்களில் நடவு செய்தோம். மற்ற ரகங்களை பொறுத்தவரை பல நாற்றுகள் இணைத்து நடவு செய்வோம்.
- ஆனால் மாப்பிள்ளை சம்பாவில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்தால் போதும். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- ஒரு மாதத்திற்கு தண்ணீர் இல்லாவிட்டால் கூட பயிர்கள் காயாது.அதேபோல் கனமழை பெய்து நீரில் மூழ்கினாலும் நீண்ட நாட்களுக்கு அழுகாது. இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடியது.
- பூச்சித் தாக்குதலும் இருக்காது. அடியுரமாக மாட்டு சாணத்தை பயன்படுத்தினோம். ‘பஞ்சகவ்யத்தை’ தயாரித்து தண்ணீர் பாய்ச்சும் போது கலந்துவிடுகிறோம், கடலை புண்ணாக்கும் பயன்படுத்துகிறோம்.
- நடவு செய்த 150 நாட்களில் அறுவடை செய்யலாம். அரை ஏக்கருக்கு 17 முதல் 19 மூடைகள் கிடைக்கும். அவற்றை ஆறு மாதங்கள் வைத்திருந்து அரிசியாக்கி விற்போம். வெளி சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்