பாரம்பரிய நெல் வகைகளில் இன்றைக்கும் பிரபலமாக பேசப்படும் ரகம் கட்டச்சம்பா. இந்தப் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், இந்த பயிரில் நோய் தாக்குதல் என்பதே இருக்காது. நம்முடைய முன்னோர் இந்த ரகத்தைப் பயிரிட்டு ஏக்கருக்கு முப்பது மூட்டைக்கு மேல் மகசூல் எடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலை அளவுகோல்
பாரம்பரிய நெல் ரகங்களில் குள்ள ரகமாக இருப்பதால், இதைக் கட்டச்சம்பா என்று அழைக்கின்றனர். இந்த நெல் ரகத்தைப் பயிரிடுவதன் மூலம், குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்கும் பலனை நம் முன்னோர் பெற்றனர்.
இருபத்து நான்கு மரக்கால் (ஐம்பத்து எட்டு கிலோ) எடை கொண்ட நான்கு மூட்டை நெல்லை 1966-ல் விற்பனை செய்து, அந்தக் காலத்தில் ஒரு பவுன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் இருபத்து ஒன்பது மூட்டை நெல்லை விற்க வேண்டும். நம் முன்னோர் நெல் விற்பனையை தங்கத்தினுடைய விலையின் அடிப்படையிலேயே வைத்திருந்தார்கள். அதற்கு ஆதாரமாக கட்டச்சம்பா நெல் முக்கிய இடம்பிடித்திருந்தது.
பருவநிலை பாதிக்காத வகை
பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றங்களிலிருந்து மீளக்கூடிய, சாயும் தன்மை இல்லாத நெல் ரகங்களில் முதன்மையானது கட்டச்சம்பா. உழைப்பாளியின் உடலுக்கு வலுசேர்க்கும் முதன்மை ரகமாக கட்டச்சம்பா நெல் இருக்கிறது. இரவு சாப்பிட்ட பின் மீதம் இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி மண்பானையில் வைத்து, மறுநாள் காலையில் அருந்தி வந்துள்ளனர். இன்றைக்கும் அந்த நீராகாரம் பதனீர் அருந்துவதுபோல் சுவையுடன் இருந்துவருகிறது.
– நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்