பாரம்பரிய நெல்லைப் போற்றிய திருவிழா

அது ஒரு குக்கிராமம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், அந்தக் கிராமம் எங்கும் குவிந்திருந்தன. கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி என மற்ற மாநிலங்களில் இருந்தும்கூட ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அந்தக் கிராமம் ஆதிரெங்கம். அங்கே நடந்தது கோயில் திருவிழாவோ, அரசியல் கூட்டமோ அல்ல. நம் மண்ணின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, இயற்கை வேளாண் முறையில் அவற்றைப் பரவலாக்கி, விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்ற ‘நெல் திருவிழா’ அது.

மண்ணும் மக்களும்

பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தி பன்மடங்கு பெருகியிருக்கலாம். ஆனால், பசுமைப் புரட்சி தந்த ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நம் மண்ணையும், மனிதர்களையும் நோயாளியாக்கி விட்டன என்பது அனுபவபூர்வமாக உணரப்பட்டுள்ளது.

நம் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமானால் நம் மண்ணுக்கேற்ற பாரம்பரியப் பயிர் வகைகள், குறிப்பாக நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த ரகங்கள் ரசாயன உரம் எதுவுமின்றிச் செழித்து வளரக்கூடியவை. வெள்ளத்தையும் வறட்சியையும், பூச்சி தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் கொண்டவை. ஏராளமான மருத்துவக் குணங்களும் நிறைந்தவை.

திருவிழா

அத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் 9 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திருவிழாவை, கிரியேட் அமைப்பின் ஒரு பிரிவான ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இந்தத் ஆண்டு மே 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர்.

உண்மையான புரட்சி

நெல் திருவிழாவைத் தொடங்கி வைத்து மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் கூறிய வார்த்தைகள் உத்வேகம் ஊட்டின: “சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்டபோது அதிக விளைச்சலுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துங்கள்; பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள் என்று என்னைப் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களிடம் பிரசாரம் செய்தோம். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள். இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுங்கள் என நாங்களே பேசத் தொடங்கிவிட்டோம். உண்மையில் இதுவே உண்மையான பசுமைப் புரட்சி. அந்த வகையில் ஆதிரெங்கம் நெல் திருவிழா மிக முக்கியமான நிகழ்வு” என்றார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தமிழகக் காய்கறி விஷம்?

“கேரளத்தின் மொத்தக் காய்கறித் தேவையில் சுமார் 30 சதவீதம் மட்டுமே கேரளத்தில் விளைவிக்கப்படுகிறது. எஞ்சிய தேவைக்காகத் தமிழகம், கர்நாடகத்தையே கேரளம் சார்ந்துள்ளது.

கேரளக் காய்கறி உற்பத்தியில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக வேகமாகக் குறைந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ நாளுக்கு நாள் அது அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் கேரளக் காய்கறி கடைகளில், இது உள்ளூர் காய்கறியா அல்லது தமிழ்நாட்டு காய்கறியா என மக்கள் விசாரித்து வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டு காய்கறி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தக் கூடாது என்னும் குரல் கேரளத்தில் வலுவடைந்துவருகிறது. மக்களின் எண்ணம் வலுவடைந்துவருவதால் இது தொடர்பாகக் கேரள அரசு ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழு தமிழ்நாட்டின் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டுக் காய்கறி உற்பத்தியில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பற்றி ஆய்வு செய்து திரும்பியுள்ளது” என்று ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். ஸ்ரீதர் பேசப் பேச, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

“பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பது பற்றி தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்தரங்கம்

‘வேளாண்மையும் இன்றைய சூழ்நிலையும்’ என்கிற தலைப்பில் சூழலியல் எழுத்தாளர் பாமயன், ‘பூச்சியும் நமது நண்பர்களே’ என்கிற தலைப்பில் பூச்சி நீ. செல்வம், ‘பாரம்பரியக் கால்நடையும் இயற்கை மருத்துவமும்’ என்கிற தலைப்பில் மருத்துவர் எம். புண்ணியமூர்த்தி, ‘நீர்நிலை பாதுகாப்பு – நீர் சேமிப்பு’ என்கிற தலைப்பில் பொதுப்பணித் துறை பொறியாளர் ஆர். இளங்கோவன், ‘இளைஞர்களை ஈர்க்கும் வேளாண்மை’ என்கிற தலைப்பில் மென்பொருள் பொறியாளர் பா. செந்தில்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஒவ்வொருவருடைய உரையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம்.

விதையே ஆயுதம்

“இந்திய விவசாய நடவடிக்கைகள் யாவும், இன்றைக்குப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களைச் சார்ந்தே உள்ளன. நம்முடைய பாரம்பரியப் பயிர் ரக விதைகள் அழிக்கப்பட்டதுதான் இந்த நிலை உருவாக மிக முக்கியக் காரணம். இந்த விதைகள்தான் வேளாண் தொழிலுக்கான பேராயுதம்.

ஆகவே, நம் கைகளில் நம் ஆயுதங்கள்தான் இருக்க வேண்டும். நம் பாரம்பரிய விதை ரங்களை மீட்டெடுத்து, மறு உற்பத்தி செய்து, அதிக அளவில் விவசாயிகள் மத்தியில் பரவச் செய்ய வேண்டும். அந்த வகையில் குறுகிய காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ள, ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் பணி மகத்தானது” என்று பாராட்டினார் ‘பாதுகாப்புக்கான உணவு இயக்க’த்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகந்தி.

விதை நெல் விநியோகம்

கடந்த 9 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்ட 152 வகை பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பங்கேற்ற ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்கள் விரும்பிய பாரம்பரிய நெல் ரகம் 2 கிலோ வீதம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. ‘அந்த விதை நெல்லைத் தங்கள் பகுதியில் பயிரிட்டு, மறு உற்பத்தி செய்த பின் 4 கிலோ விதை நெல்லை அடுத்த ஆண்டு நெல் திருவிழாவின்போது திரும்ப ஒப்படைப்போம்’ என்று விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது குறித்து விவசாயி ஆலங்குடி பெருமாள் அமைத்திருந்த நேரடி செயல் விளக்க வயலை விவசாயிகள் வியப்போடு பார்த்தனர். இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் பல்வேறு அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் ‘நெல்லதிகாரம்’, ‘உழவர்களின் நண்பன்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இப்படி அனைத்து வகைகளிலும் ஆதிரெங்கம் நெல் திருவிழாவுக்குப் பெருகியுள்ள வரவேற்பு கிரியேட் அமைப்பின் சேர்மன் பி. துரைசிங்கம், நிர்வாக அறங்காவலர் ஆர். பொன்னம்பலம், ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி உள்ளிட்ட நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உற்சாகம், உத்வேகம் பெற்றுவரும் இயற்கை வேளாண் துறையில் மேலும் பல மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.

 

மற்ற ஊர்களிலும் நெல் திருவிழா

‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், இந்த ஆண்டு நெல் திருவிழா குறித்துப் பகிர்ந்து கொண்டது:

“இதற்கு முன்பு நடைபெற்ற நெல் திருவிழாக்களைவிட இந்த ஆண்டு நெல் திருவிழா கூடுதலாகப் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டம் மூலம் இயற்கை வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்காகச் சேர்ந்துள்ள 520 பேர், இந்த ஆண்டு நெல் திருவிழாவில் பங்கேற்றனர்.

முந்தைய ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு திருவிழாவில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்றது பெருமை தருகிறது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மென்பொருள் உள்ளிட்ட பெருநிறுவனங்களில் பணியாற்றும் 240 பேர் நெல் திருவிழாவுக்கு வருகை தந்திருப்பதும் மிக முக்கியமானது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கடந்த ஆண்டு விதை நெல் வாங்கிச் சென்ற 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்த ஆண்டு அதே விதை நெல் வகையை 2 கிலோ கூடுதலாகச் சேர்த்து ஒப்படைத்துள்ளனர். இந்த ஆண்டு திருவிழாவில் 4 ஆயிரத்து 750 பேருக்குத் தலா 2 கிலோ விதை நெல் வழங்கப்பட்டுள்ளது.

“பெருகியுள்ள இந்த ஆர்வத்தின் காரணமாக ஆதிரெங்கம் தவிர, தமிழகத்தின் மேலும் சில இடங்களிலும் இந்த ஆண்டு முதல் நெல் திருவிழாவை நடத்தத் தீர்மானித்துள்ளோம்” என்கிறார்.

நெல் ஜெயராமன்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *