“பொறுமை இல்லாத விவசாயிகள்தான், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயனங்களை அள்ளிக் கொட்டுறாங்க. அப்படி கொட்டுனா முதல் அறுவடையில வேணா நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்து இப்படி செய்றப்போ, மண் மலடாகி மகசூல் குறைஞ்சுக்கிட்டேதான் போகும். ஆனா, இயற்கை விவசாயத்துல அப்படியில்லை. நாளாக நாளாக மகசூல் கூடத்தான் செய்யுமே ஒழிய குறையாது. அதோட, பாரம்பர்ய ரகங்களை விதைச்சா கண்டிப்பா லாபம் கிடைக்கும்” என் தேர்ந்த விவசாயியாகப் பேசுகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், திருப்புலிவனம் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையங்குளம் கிராமத்தில்தான் மகாலட்சுமியின் தோட்டம் இருக்கிறது. ஏரிப்பாசனம் மூலம்தான் நெல் சாகுபடி நடக்கிறது. மகாலட்சுமி, பாரம்பர்ய ரகமான ஆத்தூர் கிச்சலி சம்பாவை இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயலில் இருந்த மகாலட்சுமியை சந்தித்துப் பேசினோம்.
பசுமை விகடன் கொடுத்த விவசாய ஆசை!
“இந்த ஊர் (மலையங்குளம்) என் கணவரோட சொந்த ஊர். என் மாமனார் காலத்துல விவசாயம்தான் பிரதானம். ஆனா, என் கணவர் சென்னைக்கு வேலைக்கு வந்துட்டதால விவசாயத்தை விட்டுட்டார். அதுக்காக அவர் அடிக்கடி வருத்தப்படுவார். நானும், துணி ஏற்றுமதித் தொழில்ல இருக்கேன். விவசாய ஆர்வத்தால ‘பசுமை விகடன்’ புத்தகத்தை ஆரம்பத்துல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கிறோம். அதைப்படிக்க ஆரம்பிச்சப்பறம் விவசாய ஆசை வந்துடுச்சு 9 வருஷத்துக்கு முன்னால, இங்க இந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். வாங்கி 5 வருஷமா அப்படியேதான் போட்டு வெச்சிருந்தோம். விவசாய ஆசை அதிகமாகவும் நாலு வருஷமா விவசாயத்தையும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இங்க எப்பவும் ஏரிப்பாசனம்தான். ஒருபோகம்தான் சாகுபடி பண்ண முடியும். வருஷத்துக்கு ஒரு போகம்னு இதுவரைக்கும் நாலு போகம் நெல் போட்டு எடுத்துட்டேன். முதல் வருஷம் விளைச்சல் சரியில்லை. அப்பறம் ‘பசுமை விகடன்’ மூலமா சாகுபடி நுட்பங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். ரெண்டாவது வருஷம், இரண்டு ஏக்கர்லயும் சேர்த்து 14 மூட்டை நெல் கிடைச்சது. மூணாவது வருஷம் 20 மூட்டை நெல் கிடைச்சது. இந்த வருஷம், எப்படியும் 30 மூட்டை வரும்னு பக்கத்துத் தோட்டத்து அனுபவ விவசாயிங்க சொல்றாங்க.
சாதிக்க வைத்த இயற்கை!
நான் இங்க வந்து ‘இயற்கை விவசாயம் செய்யப்போறேன்’னு சொன்னப்போ, பக்கத்துத் தோட்டத்துக்காரங்க எல்லாரும் ஒரு மாதிரியா பார்த்தாங்க. ‘இந்த பொம்பளைக்கு என்ன பைத்தியமா… பட்டணத்துல சம்பாரிச்ச காசை வயல்ல வீணா இறைக்குது’னு என் காதுபடவே பேசினாங்க. அதனால, ‘இவங்க முன்னாடி சாதிச்சுக் காட்டணும்’னு வெறியா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். மூலிகைப் பூச்சி விரட்டியை மட்டும் அடிச்சா பத்தாதுனு கூட சொன்னாங்க. இப்போ, நான் எடுத்திருக்கிற மகசூலைப் பார்த்து 2 பேர் இயற்கை விவசாயத்துக்கே மாறியிருக்காங்க. இத்தனைக்கும் ஜீவாமிர்தம் தயாரிக்கிறதுக்கு மாடுங்க கூட என்கிட்ட இல்ல. பக்கத்துத் தோட்டத்துல இருந்துதான் சாணம், மாட்டுச் சிறுநீர் வாங்கி தயார் செய்றேன். இடுபொருட்கள் தயாரிக்க வாய்ப்பு குறைவு இருந்தாலும், நல்லபடியா விவசாயம் செய்துகிட்டிருக்கேன். இயற்கையை நம்பினா அது நம்ம கை விடாதுங்கிறது அனுபவ உண்மை” என்று பெருமிதத்துடன் சொன்ன மகாலட்சுமி, தொடர்ந்தார்.
“இப்போ, என் கணவர், என் பொண்ணு எல்லாருமே விவசாயத்துல ஆர்வமாகிட்டாங்க. போன வருஷத்துக்கு முந்தின வருஷம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்துல இருந்து ஆத்தூர் கிச்சலி சம்பா விதைநெல்லை வாங்கிட்டு வந்து விதைச்சேன். விளைஞ்ச நெல்லை அரிசியாக்கிட்டோம். எங்களோட வீட்டுத் தேவை போக கொஞ்சத்தை சொந்தக்காரங்களுக்கும் கொடுத்தோம். எல்லாருமே, ‘சுவை நல்லா இருக்குது’னு சொன்னாங்க. அதனாலதான், அடுத்த போகத்துலயும் அதையே விதைச்சேன். அதுல கிடைச்ச நெல்லை அரைச்சு அரிசியாக்கி கிலோ 70 ரூபாய்னு விற்பனை செய்தோம். இந்த போகத்துலயும் அதே ரகத்தைத்தான் விதைச்சிருக்கேன்” என்ற மகாலட்சுமி நிறைவாக,
“இதை அறுவடை செஞ்சா உத்தேசமா 30 மூட்டை (80 கிலோ மூட்டை) கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 2 ஆயிரத்து 400 கிலோ நெல்லை அரைச்சா, 1,400 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசியை 70 ரூபாய்னு விற்பனை செய்தா… 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடை செய்றதுக்கும் சேர்த்து, 14 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா இந்த வருஷம் ரெண்டு ஏக்கர் நிலத்துல 84 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.
மூலிகைப் பூச்சிவிரட்டி
நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை, தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. இதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஏழு நாட்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஓர் ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
ஓர் ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சலி சம்பா ரக நெல்லை சாகுபடி செய்யும் விதம் குறித்து, மகாலட்சுமி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
ஒரு ஏக்கருக்கு 10 சென்டில் நாற்றங்கால்!
“ஆத்தூர் கிச்சலி சம்பா ரக நெல்லின் வயது 135 முதல் 150 நாட்கள். இது கதிர் முற்றிய நிலையில் காற்றடித்தால் கூட சாயாத உறுதித் தன்மையைக் கொண்டது. அனைத்து மண்வகைகளும் இந்த ரகத்துக்கு ஏற்றவை. ஓர் ஏக்கர் பரப்பில் விதைக்க, 10 சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். பாத்தி முழுவதும் விழுமாறு ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து தூவி விட வேண்டும். 3 கிலோ விதைநெல்லுடன் அரை கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து மூன்று நாட்கள் வைத்திருந்து… அதை நாற்றங்காலில் தூவி தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 3-ம் நாளில் இருந்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தொடர்ந்து தெளிக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் எடுத்து வயலில் நடவு செய்யலாம்.
நாற்று தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்து விட வேண்டும். தேர்வு செய்த ஓர் ஏக்கர் நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, ஒரு டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்ப வேண்டும். பிறகு, நிலத்தை சேறாக்கி 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
நாற்று நடவு செய்த 10, 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 30-ம் நாளில் எஞ்சியுள்ள களைகளை ஆட்கள் மூலம் அகற்றி விட்டு… இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகவும் கொடுக்கலாம். நெற்கதிர், பால் பிடிக்கும் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 135-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். முற்றிய பிறகு, நிலத்தைக் காயவிட்டு அறுவடை செய்யலாம்.”
Highlights
- அனைத்து மண்ணிலும் வளரும் – 150 நாள் வயது
- ஏக்கருக்கு 3 கிலோ விதை
- ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல்
- அரிசியாக விற்றால் கூடுதல் லாபம்
தொடர்புக்கு – மகாலட்சுமி – செல்போன்: 09841442193 .
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்