பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்

“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த  பாரம்பர்ய நெல்வகைகள்.

தமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு,  தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தானே காரணம்…” – மிகவும் பொறுப்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன வார்த்தைகள்​ நெல் ஜெயராமனிடம் இருந்து.

திருத்துறைப்பூண்டி தாலுக்கா, கத்திமேட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவரது சேகரிப்பில்  156 வகையான பாரம்பரிய நெல்வகைகள் இருக்கின்றன. இதை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளாகக் கொடுத்து, பாரம்பரியமான இயற்கை விவசாயம் தழைக்க வழி செய்துகொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் கடந்த 10 வருடங்களாக திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதிரங்கம் நெல் திருவிழா நடந்துவருகிறது.

” நான் நுகர்வோர் அமைப்பின் மாநில விவசாயப் பிரிவில் இயக்குநராக இருந்த சமயம் அது.  2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுக்க  நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஆதரித்து, பூம்புகாரில் இருந்து கல்லணை வரை  பிரசாரப் பயணம் செய்தார். அப்போது அவர்கூட நானும் போனேன்.  தலைஞாயிறுக்குப் பக்கம், மடுகூர் கிராமத்தில் பிரசாரத்தில் இருந்தபோது வீரப்ப ராமகிருஷணன் என்கிற ஒரு விவசாயி,  ஒரு துணி முடிச்சு ஒன்றை நம்மாழ்வாரிடம் கொடுத்தார்.
‘கிராமத்து மக்கள் வழியில் சாப்பிடுவதற்கு அவல் கொடுத்திருப்பார்கள்… ‘ என நினைத்து அந்தத் துணி முடிச்சை அவிழ்த்தார். அதற்குள் இருந்தது அவல் அல்ல… காட்டு யானம் என்கிற தமிழனின் பாரம்பரிய நெல். ‘இதுபோல நிறையப் பாரம்பர்ய நெல்கள் விவசாயிகளிடம் இருக்கும். அதை எல்லாம் சேகரிக்க வேண்டும்’ எனச் சொன்னார் அந்த விவசாயி. அப்போதே அந்த வேலையை  என்னிடம் ஒப்படைத்து,  எனது பெயரையும் ‘நெல் ஜெயராமன்’ எனவும் மாற்றினார்  நம்மாழ்வார்.
அந்தப் பிரசாரப் பயணம் கல்லணையில் முடிந்தபோது… சில விவசாயிகள் குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை, கார் நெல், பனங்காட்டு குடவாலை, சிஞ்சினிக்கார்… போன்ற நெல்வகைகளைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தனர். இப்படி தமிழ் நாடு முழுக்க பயனம் செய்து,  156 வகையான தமிழனின் நெல்வகைகள் இன்று எங்களிடம் இருக்கின்றன”  என்கிற நெல் ஜெயராமன், பூங்காரு பாரம்பர்ய நெல்லுக்கான விதைத் தேர்வு , நேர்த்தி, பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பைச் செய்தததற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சகம், 2015-ம் ஆண்டுக்கான கிரிஸ்தி சம்மான் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது
ஆதிரங்கம் கிராமத்தில் இன்றைக்கு 10 ஏக்கர் பரப்பளவில் பாரம்பர்ய நெற்பயிர் சாகுபடி நடப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த  நரசிம்மன், ரெங்க நாராயணன் இருவரும் ஆளுக்கு ஐந்து  ஐந்து ஏக்கர் நிலம் தந்து உதவினார்கள். அந்த நிலத்தின் முதல் நடவை நம்மாழ்வார்தான் நட்டுவைத்துத் தொடங்கிவைத்தார். பாரம்பர்ய நெல்லை மீட்டெடுப்பதும், அதற்கு ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதும் என கடந்த 9 ஆண்டுகளாக ஆதிரங்கத்தில் நெல் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்தத் திருவிழாவுக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் பாரம்பர்ய நெற்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
ஒருவர் 2 கிலோ நெல்லை வாங்கிக்கொண்டு போனால், அடுத்த முறை அவர் அதை நான்கு கிலோ நெல்லாக திருப்பித் தரவேண்டும். அப்படி வாங்கிக்கொண்டு போகிற விவாசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஏதாவது சந்தேகம் என்றால்,  எங்கள் குழு அவர்களின் சந்தேகத்தை நிவர்த்திச் செய்யும். எங்களது நெல் திருவிழா பற்றி கேள்விபட்ட இன்டர்நேஷனல் உணவு பாதுகாப்பு பிரசாரகர் தேவேந்திர சர்மா, இந்திய அளவிலான உணவு  பாதுகாப்பு பிரசாரகர் கவிதா துர்கந்தி உள்ளிட்டோர் எங்கள் நெல் திருவிழாவில் வந்து கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு திட்டக் கமிஷனின் துணைத் தலைவாரக இருந்த சாந்தா ஷீலா  நாயர் , ‘அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தையும் நீங்க செய்துகொண்டு இருக்கீங்க. இந்த பாரம்பர்ய நெல் விதைகளை 2016 ம் ஆண்டு அரசாங்கம் உங்களிடம் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மான்ய விலையில் அளிக்கும்’ என்று சொல்லி,  அதற்கான ஏற்பாட்டையும் செய்தார்.  ஜூன் மாதம் நடக்க இருக்கும் 10 வது நெல் திருவிழாவில் 156 பாரம்பரிய நெல் விதைகளை 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் இருக்கிறது?” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே?” என்று கேட்டால் அதை மறுக்கிறார்.

” இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட உணவு கிடக்குகளில் முறையாக பராமரிக்கப்படாததன் மூலம், எலிகள் மட்டும் பூச்சிகளால் மட்டும் 22 சதவிதம் உணவுப்பொருள் வீணாகிறது.

திருமண வீடு மற்றும் ட்டல்களில் மட்டும் 14 சதவிகிதம் உணவு வீணாகிறது. இதையெல்லாம் சரிசெய்தாலே இந்தியாவின் உணவு தேவையை வெற்றிகரமாகச் சமாளிக்கலாம். தவிரவும், பாரம்பர்ய விவசாயத்தில் 1 ஏக்கரில் 20 மூட்டை(60கிலோ) நெல்லை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 5 ஆயிரம்தான்.

ஆனால் அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 25 ஆயிரம் ரூபாய். ஆனால், ரசாயன இடுப் பொருட்கள் கொண்டு 1 ஏக்கரில் 30 மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதற்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய். விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 24 ஆயிரம் ருபாய்தான். இதிலிருந்தே பாரம்பர்யமான விவசாயம்தான் லாபகரமானது என்பது உறுதியாகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் 32 ஏக்கருக்கு தேவையான இடுப்பொருட்களை ஒரே ஒரு பசுமாட்டிலிருந்து பெறலாம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.

சராசரியாக 1 கிலோ ஒட்டு ரக அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், பாரம்பர்ய நெல் அரிசி முக்கால் கிலோ மட்டுமே போதுமானது. தவிரவும் ரசாயன உரத் தாக்குதலால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதன் விளைச்சல் உற்பத்தி, இப்போது ஏக்கருக்கு 20 மூட்டையில் இருந்து 8 மூட்டையாக குறைந்திருகிறது. பாரம்பர்ய விவசாயத்தில், நாளாக நாளாக மண்ணின் வளம் பாதுகாக்கப்ப்டுவதோடு, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. பாரம்பர்ய நெல்லை   மதிப்புக் கூட்டி விறபதன் மூலம் அதாவது நெல்லாக அல்லாமல் அரிசியாக, அவலாக மாற்றி விற்பதன் மூலம். விதை நெல்லாக மட்டுமே விற்பனைக்கு தருவதன் மூலம் இதை லாபமாகவும் மாற்றிக் காட்ட முடியும். ” என்கிறார் நெல் ஜெயராமன்.

இவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் `கிரியேட் – நமது நெல்லைக் காப்போம்’ என்கிற அமைப்பு  கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தமது பிரசாரத்தை செய்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்கும் அர்த்தமுள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறது.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *