பாராட்டுகளைக் குவிக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி!

“இந்த ரகத்துக்குப் பெயர் `ராஜமுடி.’ மைசூர் மகாராஜா சாப்பிட்ட அரிசி ரகம். இது, பர்மா பிளாக். புற்றுநோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ரகம். இந்தியாவின் சிறிய நெல் ரகம் `சுகந்தினி.’ உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பிளாக் ஜாஸ்மின் தாய்லாந்து ரகம். `காலா நோனி’, அஸ்ஸாம் மாநில வாசனை ரகம். `சேலம் சென்னா’ சாப்பிடுவதற்கு ஏற்ற ரகம்…” இப்படி 1,300 நெல் ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்து, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கி, ஒரு நெல் அருங்காட்சியகத்துக்குள் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்துகிறார் சையது கனி கான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், தேசிய அளவில் நடைபெறும் இயற்கை விவசாயக் கண்காட்சிகள், பாரம்பர்ய நெல், விதைத் திருவிழாக்களில் விதைகளைக் காட்சிக்கு வைப்பதும், விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்துப் பரவலாக்குவதுமாகச் செயல்பட்டு வருகிறார்.

பரந்து விரிந்திருக்கும் பாரம்பர்ய நெல் வயல்

பரந்து விரிந்திருக்கும் பாரம்பர்ய நெல் வயல்

மாநில விருதுகள், தேசிய விருதுகள் பெற்றிருக்கும் இவர் பண்ணை, பெங்களூருவிலிருந்து 130 கிலோமீட்டர், மாண்டியாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரகவலு கிராமத்தில் உள்ளது.

சுற்றிலும் நெல், கரும்பு வயல்கள், சவுக்குத் தோட்டங்கள், ரைஸ் மில்களுக்கு மாட்டு வண்டிகளில் பயணம் போகும் நெல் மூட்டைகள் என்று அழகும் பரபரப்புமாக இருந்தது ஊர். நெல் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சியபடியே பேசிய சையத் கனி கான், “இதுதான் எனது பூர்வீகம். இந்த நிலங்கள் ஒரு காலத்தில் மானாவாரி நிலங்களாக இருந்தவை. இங்கு 15 ரகங்களில் மா சாகுபடி செய்துவந்தோம். காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணை கட்டிய பிறகு, விஸ்வேஸ்வரய்யா கால்வாய் மூலம் மாண்டியா மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகுதான் இந்தப் பகுதி, நஞ்சை நிலங்களாக மாறி வளங்கொழிக்க ஆரம்பித்தது. நாங்களும் மா சாகுபடியிலிருந்து நெல் விவசாயத்துக்கு மாறி வந்தோம்.

பாரம்பர்ய நெற்பயிர்களுடன் சையத் கனி கான்

பாரம்பர்ய நெற்பயிர்களுடன் சையத் கனி கான்

ஆரம்பத்தில் அப்பாதான் விவசாயத்தை கவனித்துவந்தார். நான் மைசூரில் தொல்லியல் மற்றும் இசை தொடர்பான பட்டப் படிப்பைப் படித்துவந்தேன். அப்பா, மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் நான் விவசாயத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் விவசாயத்துக்கு வந்ததும், ரசாயன விவசாயம் மனதுக்கு உறுத்தலாக இருந்தது. எனவே, இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்” என்று அறிமுகம் செய்துகொண்டவர், பாரம்பர்ய நெல் ரகங்கள் சேகரிப்பில் ஆர்வம் உண்டான கதையை தமிழும் கன்னடமும் (இவரது மனைவி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்) கலந்து பகிர்ந்துகொண்டார்.

‘ராஜமுடி’ என்ற பாரம்பர்ய நெல் ரகத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், வரியைப் பணமாகக் கொடுக்காமல் நெல்லை மட்டுமே கொடுத்துவந்தார்கள். `நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில்தான் பாரம்பர்ய நெல் சாகுபடிக்கு வந்தேன்.

“ஒருமுறை என் சித்தப்பா 40 பாரம்பர்ய நெல் விதைகளைக் கொடுத்து, ‘இது என்ன ரகம் என்பது தெரியவில்லை. விதைத்துப் பார்’ என்றார். அதை விதைத்து, விளைச்சல் எடுத்து வெளியே காட்டியபோதுதான் அது கர்நாடகாவில் காணாமல் போயிருந்த ‘ரத்தினச் சூடி’ என்ற பாரம்பர்ய நெல் ரகம் என்பது தெரியவந்தது. அந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தது. தொடர்ந்து `பாரம்பர்ய ரகங்களைக் கண்டுபிடித்துப் பரவலாக்க வேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. `பாரம்பர்ய ரகங்கள் குறைந்த விளைச்சல் தருபவை; நம் காலநிலைக்குச் சரியாக வளராதவை’ என்ற பேச்சுகளுக்கு மத்தியில் நான் சாகுபடியைத் தொடங்கினேன்.

நெல் பயிர்களுக்குப் பாசனம்

நெல் பயிர்களுக்குப் பாசனம்

மைசூர் உடையார் ஆட்சிக்காலத்தில் ‘ராஜமுடி’ என்ற பாரம்பர்ய நெல் ரகத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், வரியைப் பணமாகக் கொடுக்காமல் நெல்லை மட்டுமே கொடுத்துவந்தார்கள். அந்த அளவுக்கு மன்னர் குடும்பத்தைக் கவர்ந்த ரகமாக இருந்தது அது. ‘ஜிட்டு’ என்ற ரக அரிசியைச் சாப்பிட்டால், தோலில் ஏற்படும் தேமல், சொறி போன்றவை குணமாகும். `சன்னிக்கி’ என்ற ரகம் மலச்சிக்கல் தீர்க்க உதவும். அம்யேமுகர், கரி கனுவாலி ஆகிய ரகங்கள் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தும். மகாராஷ்டிராவின் `மகடி’ என்ற ரகம் எலும்பு மூட்டுகளில் வலு சேர்க்கும். அடிபட்டால் அந்த அரிசியிலேயே பற்றும் போடுவார்கள். `தென்னிந்தியாவின் பாஸ்மதி’ என்றழைக்கப்படும் சீரகச் சம்பா வாசனை பற்றி அனைவரும் அறிவார்கள். கேரளாவின் ‘நவரா’-வை எலும்பு வலுவுக்கு மருத்துவர்களே பரிந்துரை செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, கிச்சிலிச் சம்பா பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம் பாரம்பர்ய அரிசி வகைகள் 50 சதவிகித மருத்துவத்தன்மை கொண்டவை. மீதி சுவைத்தன்மையைக் கொண்டவை.

காட்சிக்கு வைக்கப்படும் பாரம்பர்ய நெல் ரகங்கள்

காட்சிக்கு வைக்கப்படும் பாரம்பர்ய நெல் ரகங்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு நெல் ரகம் இருந்திருக்கிறது. `அப்படிப்பட்ட நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில்தான் பாரம்பர்ய நெல் சாகுபடிக்கு வந்தேன். பிறகு கர்நாடகாவில் இயங்கும் ‘சகஜ சம்ருதா’ என்ற அமைப்பின் மூலமாகவும், `நமது நெல்லைக் காப்போம்’ பிரசாரம் மூலமாகவும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாக, சந்திக்கும் விவசாயிகளிடமிருக்கும் நெல் விதைகளைக் கொண்டு வந்து விதைத்து, அதை மற்றவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்னர் 40 ரகங்களிலிருந்து தொடங்கிய பாரம்பர்ய நெல் சாகுபடி, இன்று 1,300 ரகங்களில் வந்து நிற்கிறது” என்றவர், தன்னுடைய விவசாயம் பற்றிய தகவலுக்குள் நுழைந்தார்.

‘‘இந்தப் பாரம்பர்ய நெல் ரகங்களை 25 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று இலவசமாகத்தான் கொடுத்துவருகிறேன்.’’

“எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கிறது. அதில் ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் விதைப்பெருக்கமும், ஒன்பது ஏக்கரில் வர்த்தகரீதியான நெல் சாகுபடியும், ஐந்து ஏக்கரில் மா சாகுபடியும் நடக்கின்றன. வீட்டுத் தேவைக்கான பாலுக்காகவும், இயற்கை உரத் தேவைக்காகவும் ஐந்து மாடுகள் வளர்க்கிறேன். நாடு முழுவதும் நடைபெறும் பாரம்பர்ய விதைத் திருவிழாக்களில் நெல் ரகங்களைக் காட்சிக்குவைத்து அதன் சிறப்புகளைச் சொல்லிவருகிறேன்” என்றவர் நிறைவாக,

விருதுகளுடன்

விருதுகளுடன்

“நேரடி விதைப்பு முறையில் ஓர் ஏக்கரில் சாகுபடி செய்ய உழவு, களை, அறுவடை என ஆண்டுக்கு 40,000-50,000 ரூபாய் செலவாகிறது. ஒவ்வொரு ரகத்திலிருந்தும் அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை நெல் விதைகள் கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் நெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவிடுகிறேன்.

வர்த்தகரீதியான நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் சராசரியாகக் கிடைத்து வருகிறது. அந்த வருமானத்தையும், மா சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானத்தையும் என்னுடைய தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். இப்போது வீட்டின் மாடியில் நெல் அருங்காட்சியகம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகளுக்கு இங்கேயே பயிற்சிகள் கொடுக்கவும் திட்டமிட்டுவருகிறேன்.

‘‘மகாராஷ்டிராவின் `மகடி’ என்ற ரகம் எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்க்கும். அடிபட்டால் அந்த அரிசியிலேயே பற்றும் போடுவார்கள்.’’

கர்நாடக இயற்கை விவசாயிகள் கூட்டாக இணைந்து அரிசி விற்பனை மேற்கொள்கிறோம். இந்தப் பாரம்பர்ய நெல் ரகங்களை 25 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று இலவசமாகத்தான் கொடுத்துவருகிறேன். விதைகளை வாங்க வருபவர்கள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், கொடுக்கும் விதையைப் பெருக்கி, மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்பவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான் நிபந்தனை. என்னிடம் 1,300 ரகங்கள் இருக்கின்றன. ஒரு கிராமத்தில் ஒரு ரகம் விளைவிக்கப்பட்டாலும், பாரம்பர்ய நெல் ரகங்கள் எளிதாகப் பரவிவிடும். அப்படி விதைகளைப் பரப்ப ஆர்வமுள்ளவர்கள் என்னை அணுகலாம்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சையது கனி கான், செல்போன்: 78926 92713, 99017 13351.

நெல் சாகுபடி முறைகள்

“உழுவதற்கு முன்னர் உளுந்து, பச்சைப்பயறு இவற்றில் ஏதாவது ஒன்றை விதைத்து, வளர்ந்த பிறகு மடக்கி உழுதுவிட வேண்டும். மட்கிய மாட்டு எருவை ஏக்கருக்கு ஒரு டன் தூவிவிட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை 10 கிலோ, 20 கிலோ என்ற அளவில் புதிய சாணத்தைப் பாசனநீர் வழியாகக் கரைத்துவிட வேண்டும்.

பாரம்பர்ய ரகங்கள் என்பதால் பூச்சித்தாக்குதல் 90 சதவிகிதம் இருக்காது. அப்படி இருந்தால், ஒடித்தால் பால் வரும் தாவர வகைகளில் இரண்டு வகை இலைகள், கசப்பு தன்மையுள்ள மூன்று வகை இலைகள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்த ஐந்திலைப் கரைசலில் ஒரு லிட்டர் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். உடனடியாகப் பூச்சிவிரட்டி வேண்டுமென்றால், இலை தழைகளைத் துண்டு துண்டாக வெட்டி, தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்த வேண்டும். வடியும் சாற்றை ஆற வைத்து மாட்டுச் சிறுநீரில் கலந்து தெளிக்கலாம்” என்கிறார் சையது கனி கான்.

அதிக தண்ணீர் களைகளைக் கட்டுப்படுத்துமா?

“பெரும்பாலான விவசாயிகள், `வயலில் தண்ணீரைத் தேக்கினால் களைகள் கட்டுப்படும்’ என்று நினைக்கிறார்கள். அது உண்மைதான். அதே நேரம், நெற்பயிரின் வேர்கள் நிலத்துக்குள் ஊன்றுவது தடுக்கப்படும் என்பதை மறந்துவிடுகிறார்கள். களைகள் அதிகமாக வளரும் வயல்களில் மூன்று முறை உழவு ஓட்டினால், எளிதாகக் களைகளைக் கட்டுபடுத்திவிட முடியும். நெல்லுக்கு வாரத்துக்கு ஒரு தண்ணீர் போதுமானது.

அதுவும் நிலத்தை ஈரப்படுத்தும் அளவில் இருந்தால் போதும். கேழ்வரகுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதைபோலத்தான் நெல்லுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கதிரில் பால் ஏறும் சமயத்தில் மட்டும் நிலத்தில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் சையது கனி கான்.

பயன்பாட்டிலுள்ள பாரம்பர்ய நெல் ரகங்கள்

ராஜமுடி, ரத்தின சூடி, மைசூர் மல்லிகே, எச்.எம்.டி., சின்னபொன்னி, கரிகஜவாலி, ககிசலே, சேலம் சன்னா, கரி கஜிலி, ரசகதம், தொட்டபத்தா, நலபாய்ன்சி, கர்நாடக ஜீரகச் சென்னா, சுகந்தினி, ராமிகலி (ஒடிசா), ஜெகந்நாத், கந்தசாலா (கேரளா), பர்மா பிளாக், டேராடூன் பாஸ்மதி, மெட்ராஸ் சென்னா, காட்டுயானம், பாகிஸ்தான் பாஸ்மதி, ராஜ்கமல், கம்கடல், கல்ஜீரா, கர்மகந்தா, மகடி, கீரிபிள்ளன், ஹமாய், மணிப்பால், கங்கா பத்தா, நவகாளி, தவன், தொண்டி, நகரா, அல்லி கண்ணன், மிளகுச் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, சன்னிக்கி, கட்டச்சம்பா, பூங்கார், ரூபாலி, நேபாள் சீரகச் சம்பா, கொத்தமல்லி பத்தா, நாக் கேசர் (ஊதா நிறத்திலிருக்கும் ராஜஸ்தான் ரகம்), ரெட்புட், நாரிகேலா, காலாபாத், அஸ்ஸாம் பாத், துளசியா என்று 1,300 ரகங்களின் பட்டியல் நீள்கிறது. பெரும்பாலான நெல் ரகங்கள் 100-140 நாள்கள் வயது கொண்டவை.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *