தொடர்ந்து 48 நாட்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம் சாப்பிட்டு வந்தால் இளவட்ட கல் துாக்கும் அளவு உடல் வலுப்பெறும். மாடு அடக்கி வெற்றி பெறலாம் என, அந்தக்கால முன்னோர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் பெருமைக்காகவே மாப்பிள்ளை சம்பா அரிசியை சாகுபடி செய்துள்ளேன் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்.
அவர் கூறியது:
- 2 ஏக்கர் நிலத்தில் கம்போஸ்டர், நுனா, புங்கை, பூவரசு, வேம்பு, எருக்கு தழை சேர்த்து உழவேண்டும்.
- கம்போஸ்டர் உரத்தை நிலத்திலேயே தயார் செய்தேன்.
- ஒன்றரை அடி ஆழ பள்ளத்தில் மாட்டுச்சாணம், கோமியம், நிலக்கடலை புண்ணாக்கு, வெல்லக்கரைசல் சேர்க்கவேண்டும். குழியைச் சுற்றி 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கரைசலை ஊற்றவேண்டும்.
- இதன்மேல் வைக்கோல் பரப்பி 10 நாட்கள் விடவேண்டும். இந்த கம்போஸ்ட் உரத்தில் மண்புழுக்கள் அதிகளவில் உருவாகியிருந்தன. இந்த மண்புழு உரம் தான் நெல்லுக்கு போட்டேன்.
- ஏக்கருக்கு 10 முதல் 20 கிலோ மாப்பிள்ளை சம்பா நெல்லை விதைத்தேன். நாற்றாக வந்ததும் ஒவ்வொரு நாற்றாக பிரித்து கயிறு கட்டி வரிசை முறையில் வயலில் நட்டேன். காய்ச்சலும் பாய்ச்சலுமாக அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மண்ணின் தன்மை கெட்டிப்படும்.
- இதனால் நெற்பயிரின் வேர் தண்ணீரைத் தேடி ஆழமாக தரையில் செல்லும். இதனால் புயல், மழை வந்தாலும் பயிர் சாயாது.
- நான்கரை மாதத்தில் கதிர் கட்டும்.
- தரையில் ஜீவாமிர்த கரைசலும் மேற்பரப்பு கதிரில் பஞ்சகவ்யம் ஸ்பிரே செய்ய வேண்டும். இதனால் நெல்லில் பூச்சி தாக்குதல் வராது.ஆறுமாதத்தில் ஆறு அடி உயரத்தில் கதிர் முற்றி அறுவடை செய்யலாம். இது மோட்டோ ரகம். பெரிதாக சிவப்பு நிறத்தில் அரிசி இருக்கும்
- இதை ஒரு சில மில்லில் தான் அரிசியாக்குவர். உடலுக்கு வலுவேற்றும் இந்த அரிசி தற்போது இருப்பில் வைத்துள்ளேன். அடுத்ததாக ராஜாக்கள் சாப்பிடும் காட்டுயாணம் நெல் உற்பத்திக்கு நிலம் தயாராக உள்ளது என்றார்.
இவருடன் பேச 8489257710
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்