மாசிப்பட்டத்தில் குட்டைப்புடலை சாகுபடி

 • வயலின் நடுவே நேர் கால்வாய் எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்த நிலத்தில் 144 குழிகள் வெட்ட வேண்டும். குழியில் மண், நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.
 • குழியில் நட பிளாஸ்டிக் பை நாற்று தயார் செய்ய வேண்டும். விதையை ஒரு பகல் பூராவும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து இரவு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் ஊறப்போட்டு ஆறு மணி நேரம் கழித்து பாலிதீன் பையில் விதைக்க வேண்டும்.
 • பாலிதீன் பையில் மக்கிய எரு, செம்மண் கலவையை நிரப்பி அதில் விதையை ஊன்றி பாசனம் செய்ய வேண்டும். விதைகள் அனைத்தும் ஏழு நாட்களில் பழுதில்லாமல் முளைத்துவிடும்.
 • நிலத்தில் 20 சென்ட் பரப்பில் விதைக்க கால் கிலோ விதை போதுமானதாக இருக்கும்.
 • பாலிதீன் பையில் வளரும் செடியின் வயது 35 நாட்கள் ஆனவுடன் அவைகளை விவசாயிகள் ஏற்கனவே தயார் செய்திருந்த குழிகளில் நடலாம்.
 • திடமான இரண்டு செடிகளை ஒரு குழியில் நடலாம்.
 • செடிகள் வளர்ந்துவரும்போது பந்தல் போட்டுக் கொள்ளலாம்.திடமான பந்தல் போட செலவு ரூ.1000 வரை ஆகலாம்.
 • குழியில் உள்ள செடிகள் நான்கு இலைகள் பருவம் அடைந்தவுடன் செடிகளுக்கு அருகில் குச்சி நட்டு கொடியை பந்தல் மேல் ஏற்றிவிடலாம். பந்தல் மேல் அது நன்றாக படர்ந்து வளரும்.
 • பந்தலில் ஏறும் செடிகளுக்கு குழியில் நன்கு மக்கிய தொழு உரம் இதனுடன் உயிர் உரங்களை நன்கு கலந்து வைக்க வேண்டும்.உடனே பாசனம் செய்யலாம்.
 • குழியில் டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை மருந்து பொடியை மணலுடன் கலந்து இடவேண்டும். ரசாயன உரங்களை போடாமல் செடியை வளர்க்கவும்.
 • சாகுபடி காலத்தில் இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளை பைட்டோபிராட் மற்றும் பவேரியா பாசியானா (ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி மருந்தினை கலந்து) தெளிக்கவேண்டும்.
 • செடிகளுக்கு அறுவடை காலத்தில் புண்ணாக்கு உரங்கள் மற்றும் மக்கிய தொழு உரம் இவைகளை மேலுரங்களாக இடவும். செடிகளுக்கு ஆரம்ப காலத்தில் நல்லபடியாக களை எடுத்துவிட்டால் பின்னால் களையெடுக்கும் அவசியம் ஏற்படாது.
 • பயிர் பாதுகாப்பு பணியை சுமார் 60, 65 நாட்கள் கவனமாக செய்ய வேண்டும்.
 • மாசியில் நட்ட செடிகள் சித்திரைப் பட்டத்திலிருந்து மகசூல் தரும்.

அறுவடை விவரங்கள்
சித்திரை மாத அறுவடை 400 கிலோ. ஒரு கிலோ விலை ரூ.15. வருவாய் ரூ.6,000. வைகாசி மாத அறுவடை 600 கிலோ. ஒரு கிலோ விலை ரூ.9. வருவாய் ரூ.5,400. ஆனி மாத அறுவடை 800 கிலோ. ஒரு கிலோ ரூ.8. வருவாய் ரூ.6,400. ஆடி மாத அறுவடை 800 கிலோ. ஒரு கிலோ ரூ.6, வருவாய் ரூ.4,800. 20 சென்டில் கோடை மாதத்தில் குட்டைப்புடலை சாகுபடியில் மொத்தம் ரூ.22,600 எடுக்க முடியும். சாகுபடி செலவு ரூ.8,900 போக நிகர லாபம் ரூ.13,700 எடுக்கலாம்.

குட்டைப்புடலை சிறப்பியல்புகள்

 • நீட்டுப் புடலையைவிட குட்டைப்புடலையில் அதிக மகசூலினை எடுக்க முடியும்.
 • குட்டைப்புடலையை கோணி சாக்குகளில் பேக் செய்து தொலைதூர மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
 • குட்டைப்புடலை சுவையில் மிகச்சிறந்தாக உள்ளது.
 • குட்டைப்புடலையில் பயிர் பாதுகாப்பு செலவுகுறைவு.
 • நீட்டுப்புடலையில் காய்கள் நீளமாக வளர காயின் நுனியில் கல்லைக்கட்டி தொங்கவிட வேண்டி வரும். இம்மாதிரியான நிர்பந்தம் குட்டைப்புடலையில் கிடையாது.

-எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *