பூசணி செடியில் சிவப்பு வண்டு

சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும். வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, திசுக்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன.

இளம் செடிகளில் வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் எல்லாம் வண்டுகளால் துளைக்கப்பட்டு சேதப்படுத்தப் படுவதால் செடிகள் மடிந்துவிடக்கூடும்.

வளர்ந்த செடிகளின் இலைகளில் அனேக துவாரங்கள் உண்டுபண்ணினாலும் அவை மடிந்துவிடுவதில்லை.

ஆனால் செடியின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மண்ணில் இருக்கக்கூடிய புழுக்கள் செடிகளின் வேர்களைக் கடித்து, உண்டு சேதம் விளைவிக்கும். அவை மண்ணில் வந்து தொடும் காய்களையும் துளைத்து உட்புறத்திலுள்ள சதைப்பகுதியை உண்டு சேதம் விளைவிக்கக் கூடியவை.

பூச்சியின் வாழ்க்கை சரிதம்:

 

  • பெண் வண்டு, ஆரஞ்சு நிற, நீண்ட குழாய் வடிவ முட்டைகளை தனித்தனியாக அல்லது சிறு சிறு குவியல்களாக செடிகளின் அடியில், ஈரமான மண்ணின் மேல் இடும்.
  • ஒரு வண்டு சுமார் 300 முட்டைகள் வரை இடக்கூடியது. முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் 13-25 நாட்களில் முழு வளர்ச்சியடையும்.
  • வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கடியில் கூண்டுப்புழுக்களாக மாறி, 7-15 நாட்களில் வண்டுகளாக வெளிவரும்.
  • வண்டுகளின் மேல்பரப்பு ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்துடனும் அடிப்பரப்பு கருமைநிறத்துடனும், வெண்மையான மிருதுவான ரோமங்களைக் கொண்டும், முன் இறக்கைகள் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்துடனும் காணப்படும்.

பூச்சிக்கட்டுப்பாடு:

 

  • நிலத்தை நன்கு உழுது, கூண்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம்.
  • கை வலை பயன்படுத்தி, பூச்சிகளைப் பிடித்து அழிக்கலாம்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படும் செடியின் பாகங்களை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.
  • நிலத்தில் உள்ள களைகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
  • ஏக்கருக்கு மாலத்தியான் 400மில்லி வீதம் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • தாக்கப்பட்ட காய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

முனைவர் கோ.பி.வனிதா,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையம், மதுரை.
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
ரோவர் வேளாண்மைக்கல்லூரி, பெரம்பலூர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *