இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்!

பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்!

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பற்றி கூறும், மஹாராஷ்டிரா மாநில வேளாண் விஞ்ஞானி, சுபாஷ் பலேக்கர் கூறுகிறார்:

விதை நேர்த்திக்கான, பீஜாமிர்தம் தயாரிக்க, தண்ணீர் – 20 லி., நாட்டு பசுஞ்சாணம் – 5 கிலோ; நாட்டு பசு சிறுநீர் – 5 லி., சுண்ணாம்பு – 50 கிராம்; சாகுபடி நில வரப்பு மண் ஒரு கைப்பிடி தேவை.சாக்கு அல்லது துணியில் சாணத்தை போட்டு, ஒரு குச்சியில் கட்டி, நீரில் மிதக்க விட வேண்டும்.

பின், இரண்டு அல்லது மூன்று முறை சாக்கை பிழிந்து, கழிவை அகற்றி, மற்ற பொருட்களை கலந்து, 12 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டினால், பீஜாமிர்தம் தயார்.

நெல், தானியங்களை சிறிது நேரம் இதில் ஊற வைத்தும்; நிலக்கடலை மற்றும் பயறு வகை விதைகளின் மீது லேசாக தெளித்தும்; வாழை, கரும்பு, மஞ்சளை பீஜாமிர்தத்தில் மூழ்க வைத்தும் எடுத்து நட வேண்டும்.

ஊட்டம் கொடுக்கும் ஜீவாமிர்தத்திற்கு தண்ணீர் – 200 லி., சாணம் – 10 கிலோ, பசு சிறுநீர் – 10 லி., வெல்லம், பயறு மாவு – தலா, 1 கிலோ; சாகுபடி நில மண், ஒரு கைப்பிடி தேவை. பழைய சாணத்தை பயன்படுத்த கூடாது.

அனைத்து பொருட்களையும் பெரிய பாத்திரத்தில் கலந்து, இரண்டு நாள் கழித்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்துக்குள் பயன்படுத்தினால், நல்ல பலன் கொடுக்கும்.

நிழலில், காற்றுபுகாமல் பேரலை மூடி, காலை, மாலை இருமுறை குச்சியால் கரைசலை, வலதுபுறமாக கலக்கிவிட வேண்டும்.பாசன நீருடன் கலந்தும், இலைவழி தெளிப்பாகவும் பயன்படுத்தலாம்.

இளம்பயிராக இருந்தால், 1 லி., தண்ணீருக்கு, 50 மில்லியும், வளர்ந்த பயிர்களுக்கு, 100 மில்லியும் ஜீவாமிர்தத்தை கலந்து தெளித்தால், செழித்து வளர்வதுடன், அதிக மகசூலும் கொடுக்கும்.கன ஜீவாமிர்தம் திட நுண்ணுயிர் கலவைக்கு, சாணம் – 100 கிலோ; வெல்லம், பயறு மாவு – தலா, 1 கிலோ; சாகுபடி நில மண், ஒரு கைப்பிடி தேவை. உப்புமா பதத்தில், பசு சிறுநீர் கலந்து, குவியலாக நிழலில் இரண்டு நாள் வைக்க வேண்டும்.

பின் நிழலில் உலர்த்தி, துாளாக்கி பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன், நாற்றங்காலிலும் பயன்படுத்தலாம்.தண்ணீர் – 100 லி., சாணம் – 2 கிலோ; பசு சிறுநீர் – 5 லி., அரைத்த வேப்பிலை – 5 கிலோ என, அனைத்தையும் கலந்து, 24 மணி நேரம் ஊற வைத்து, இரு வேளை குச்சியால் கலக்கிவிட வேண்டும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட வேப்பிலை அஸ்திரத்தை, வடிகட்டி தெளித்து, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மாவு பூச்சிகளை கட்டுப் படுத்தலாம்.பிரம்மாஸ்திரம் தயாரிக்க, பசு சிறுநீர் – 10 லி., அரைத்த வேப்பிலை – 5 கிலோ; அரைத்த சீதா, பப்பாளி, மாதுளை, கொய்யா இலை – தலா, 2 கிலோ என, அனைத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

ஒரு நாள் கழித்து வடிகட்டி, 2 – 2.5 லி., பிரம்மாஸ்திரத்தை, 100 லி., நீரில் கலந்து தெளித்தால், அனைத்து பூச்சிகளும் குறையும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *