ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழுத் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தும் இப்புழுவை முழுவதும் கட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது. இந்தப் புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்துடன் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் உயிரியல் ஆய்வுக்கூடம் உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்துள்ளது.
பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை, ஈரோடு மாவட்ட வேளாண்மைத் துறை இணைந்து மாவட்டத்தின் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.
இதன் மூலம் பயிர்களைத் தாக்கிய படைப்புழுவை உயிரியல் பூச்சிக்கொல்லி முற்றிலும் கட்டுப்படுத்தியது விவசாயிகளிடம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த பூச்சிக்கொல்லி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புழுவின் தன்மை மற்றும் கட்டுப்படுத்தும் முறை:
இளம் புழுக்களின் தலைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தலைகீழாக இருப்பது போன்று காணப்படும். தாய் அந்துப்பூச்சி 100 முதல் 200 முட்டைகளைக் கொண்ட குவியலாக இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. அதில் இருந்து வெளியேறும் வெள்ளைப்புழுக்கள் இலைகளை சுரண்டி தின்பதால் இலைகள் பச்சைநிறத்தை இழந்து வெள்ளை நிறமாக மாறும். இளம்செடிகளில் இலைகளின் உறைகளிலும் முதிர்ந்த செடிகளில் கதிரின் நூல் இலைகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்ட இலைகளில் வரிசையாக துளைகள் காணப்படும். பகல் நேரங்களில் பயிர்களின் தண்டுகளில் தன்னை மறைத்து உள்ளிருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும். இதனைக் கட்டுப்படுத்துவது கடினமானது.
பூச்சிக்கொல்லியான மெட்டாரைசியம், பெவேரியா, நூரின்ஞ்யென்சிஸ் வகை பூச்சிக்கொல்லிகளை ஒரு லிட்டரில் 10 மில்லி வீதம் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் உயிர்க்கொல்லி மருந்துகளை பண்ணாரி அம்மன் ஆலையின் உயிரியல் ஆய்வுக் கூடத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04295250264 , 9842213400 , 9994936700 என்ற தொலைபேசி எண்களில தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்