காளான் வளர்ப்பில் பூச்சி, நோய் நிர்வாகம்

சிப்பிக்காளான் படுக்கைகளில் பச்சைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய் ஆகியவை அதிக ஈரப்பதத்தின் காரணமாக தோன்றுகின்றன. தவிர போரிட் ஈ, சியரிட் ஈ, ஸ்பிரிங்டெயில் பூச்சிகளும் தோன்றி காளான் படுக்கைகளில் முட்டைகளை இடுகின்றன. ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை கடைபிடிப்பது இன்றியமையாததாகிறது.

பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள்:

 • காளான் படுக்கைகளைத் தயார் செய்ய நோய்கள், பூச்சிகள் தாக்காத வைக்கோலைப் பயன்படுத்த வேண்டும்.
 • ஊறவைத்தபின் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோல்களைப் படுக்கைகள் தயார் செய்ய பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது வைக்கோலின் ஈரப்பதம் 60 முதல் 65 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
 • வைக்கோலை உலர வைக்கும்போது மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பான் மூலம் ஈக்கள் வைக்கோலில் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
 • காளான் வளர்ப்புக் குடிலில் உள்ள சன்னல் கதவுகளுக்கு நைலான் வலைகள் பொருத்த வேண்டும். இதன்மூலம் ஈக்கள், வண்டுகள், காளான் குடிலுக்குள் வருவது தடுக்கப்படுகிறது.
 • காளான் படுக்கைகளில் ஈரப்பதத்தைக் காக்க காலை, மாலை வேளைகளில் நீர் தெளிக்கும்போது காளான் படுக்கையில் நீர் தேங்கினால் காளான் அழுகிவிடும். நீர் தெளிப்பதற்கு சிறு தெளிப்பான்களைப் பயன்படுத்துவது அவசியம்.
 • நல்ல தரமான பூசண நோய்களால் பாதிக்கப்படாத காளான் வித்துக்களை மட்டும் காளான் படுக்கைகள் தயார் செய்ய பயன்படுத்த வேண்டும்.
 • பாக்டீரியா அழுகல் நோயைத் தடுக்க பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர்  நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து படுக்கைகள் மீது தெளிக்க வேண்டும்.
 • கிளைப்பூசணங்கள் தோன்றிய படுக்கைகளை உடனடியாகக் காளான் குடிலில் இருந்து அகற்றி அழித்துவிட வேண்டும்.
 • காளான் குடிலின் அருகில் குப்பைக்குழிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • களைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய், போரிட் ஈ ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட காளான் படுக்கைகளை பெரிய குழிதோண்டி புதைத்துவிட வேண்டும். குழிகளின் மேற்பகுதியில் எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • காளான் குடில்களை அறுவடை முடிந்தபிறகு 45 நாட்களுக்கு ஒரு முறை தொற்றுநீக்கம் செய்வது அவசியம். இதற்கு பார்மலின் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மருந்துகளை 2:1 என்ற விகிதத்தில் கலந்து குடில்களில் வைத்தபின் இரண்டு நாட்களுக்கு குடிலைத் திறக்கவோ, உள்ளே செல்லவோ கூடாது. குடிலின் சன்னல்களும் நன்றாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

தகவல்: சே.கோபாலகிருஷ்ணன், வீ.வள்ளுவபாரிதாசன், வே.பிரகாசம், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *