பொதுவாக இப்போது வெளிநாடு பயணங்கள் அதிகரித்து விட்டன. கேரளா போன்ற மாநிலங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தவர் அதிகம். அவர்கள் இந்தியாவுக்கு வரும் போது செடி, கொடி , விதை என்று ஏதாவது எடுத்து வருவதெல்லாம் வழக்கம். இவற்றில் பூச்சி அல்லது அவற்றின் முட்டைகள் இருந்திருக்கலாம்.
அதே போல் உலக வர்த்தகம் அதிகரித்து கொண்டே போவதால், நிறைய கண்டைனர்கள் இப்போது சர்வ சாதாரணமாக ஒரு கண்டம் இருந்து இன்னொரு கண்டம் செல்கின்றன. இவை மூலமும், செடி, விதை, பூச்சி, முட்டை ஆகியவை வருகின்றன.
இங்கே அவற்றின் இயற்கை எதிரி இல்லதாதல் இவை தாறு மாறாக வளர்கின்றன. ஆகாய தாமரை, பார்த்தீனியம், ஆஃப்ரிக்க நத்தை எல்லாம் இந்த ரகம் தான். அழையா விருதாளிகள்.. அந்த லிஸ்டில் இன்னொரு பூச்சி!
சமீபத்தில் தமிழகத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் சேதத்தை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படைப்புழு எந்த ரசாயன மருந்துக்கும் கட்டுப்படுவதில்லை. ரசாயன மருந்துகளுக்கு எதிராக, எதிர்ப்பு சக்தியை அதிகமாக வளர்த்துக்கொண்டுவிட்டது. எனவே, குறைந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து அழையா விருந்தாளியாக வந்திருக்கிறது, போண்டர் நெஸ்ட்லிங் ஒயிட்பிளைஸ் (Bondar Nestling whiteflies) எனும் பூச்சி. இது இந்தியாவிலேயே இல்லாத ஒரு பூச்சி வகை. இப்போது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு தென்னை மரத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. இதற்கு முன்னால் தென்னை மரத்தில் ருகோஸ் ஸ்பைரல்லிங் ஒயிட்ப்ளைஸ் (rugose spiralling whiteflies) என்ற பூச்சி வகையே இருந்தது. கேரளாவில் காணப்பட்ட போண்டர் நெஸ்ட்லிங் ஒயிட்பிளைஸானது உருவில் சிறியதாகவும் 1.0 மிமீ வடிவிலும் உள்ளது. இதன் இறக்கையில் x வடிவம் போன்ற கறுப்புக் கோடுகள் இருக்கும். இது இலையின் பின்பகுதியில் தங்கி செடிகளை சேதப்படுத்தும். இந்த வகை பூச்சி புளோரிடாவில் முதன்முதலில் 2011-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.
கேரள மாநிலத்தில் தென்னை மரத்தில் இப்போது கண்டறியப்பட்டபோது, எந்த வகை பூச்சி என்பது கண்டறியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் புளோரிடாவில் வந்த அந்த பூச்சியின் மரபணுவையும், தற்போது கேரளாவிலுள்ள பூச்சியின் மரபணுவையும் ஒப்பிட்டனர். அப்படி ஒப்பிடுகையில் ப்ளோரிடாவில் வந்த அதே பூச்சிதான் கேரளாவிலும் உள்ளது என்பது 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தென்னை, வாழை, சீத்தா பழம், எலுமிச்சை, மரவள்ளிக் கிழங்கு, அத்தி போன்ற பல்வேறு செடி வகைகளில் வெவ்வேறு நாடுகளில் இவ்வகை பூச்சிகள் காணப்படுகின்றன. ஆனால், இந்த வகை பூச்சியால் அதிக இழப்பு ஏற்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இருப்பினும் `நாளை இதுபோல எந்தப் பூச்சியும் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாத அளவு பயிர் பாதுகாப்புத்துறை செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்