தென்காசி : சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சி ஒரு வகை ஈ ஆகும். இது பழுப்பு நிறமாக இருக்கும். தாய் ஈயானது சற்று நீண்ட, தட்டையான வெண்மை நிற முட்டைகளை தனித்தனியாக தோகையின் அடிப்புறத்தில் இடுகிறது. முட்டைகளில் இருந்து 2, 3 நாட்களில் கால்கள் அற்ற இளம் மஞ்சள் நிற புழுக்கள் வெளிப்படும். இவை தோகையின் மேல் பாகத்திற்கு வெளிந்து வந்து இளம் குருத்திற்கும் தண்டிற்கும் நடுவே குடைந்து செல்லும். இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் துண்டிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்கப்பட்ட குருத்து மக்கி அழுகி விடும். புழுக்கள் அழுகிய குருத்தில் நின்று சுமார் 10 தினங்களில் முழு வளர்ச்சியுற்று கூட்டு புழுக்களாக மாறுகின்றன. கூட்டுப்புழு தண்டின் அடிப்பாகத்தில் தண்டினுள்ளே இருக்கும். சில சமயம் நிலத்திலும் கூட்டுப்புழுவாக மாறுகிறது. இதன் பருவம் 8 முதல் 10 நாட்கள் ஆகும்.
இதன் புழுக்கள் குருத்தின் அடிப்பாகத்தில் துவாரமிட்டு குருத்திலுள்ள திசுக்களை உண்பதால், குருத்து காய்ந்து செடி வாடிவிடும். இதனுடைய தாக்குதல் விதைப்பிலிருந்து ஒரு மாதம் காலம் வரை இளம் சோள பயிரில் காணப்படும். சோளத்தை செல்லி விதை என்ற பழமொழிக்கேற்ப ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து சோளத்தை விதைப்பதால் இப்பூச்சிகளின் அதிகமான இன விருத்தியினையும் சேதத்தையும் தவிர்க்கலாம்.
நாற்று விட்டு நடுவதால் குருத்து ஈ தாக்கிய நாற்றுகளை தவிர்த்து நல்ல நாற்றுகளை பிரித்து எடுத்து நடவு செய்யலாம். குருத்து ஈ வராமல் தடுத்திட விதைக்கும் முன்பாக 20 மில்லி நீரில் 4 மில்லி குளோர் பைரிபாஸ் ஒரு கிலோ விதைகளை இந்த கரைசலுடன் கலந்து விதைக்க வேண்டும். மேலும் நடவு வயலில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் ஏக்கருக்கு 300 மில்லி மருந்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்