பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் நன்மை அளிக்கின்றன. இப்பூச்சி இனங்கள் பயிரை தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழ்ந்து, அவை அதிகம் பெருகாமல் பார்த்து கொள்கிறது.
பாதுகாக்கும் முறைகள் :
- இயற்கை எரு, கம்போஸ்ட் மண்புழு உரம், உயர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா), பசுந்தாள் உரங்கள், (கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு) முதலிய வற்றை பயன்படுத்தி மண்ணில் வாழும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.
- வயல் வரப்புகளில் உள்ள கிணற்றடிப்பூண்டு அல்லது வெட்டுக்காயத்தழை போன்ற செடிகள் நன்மை செய்யும் குளவிகளை கவரும் தன்மை கொண்டவை.எனவே இவற்றை அழிக்காமல் விட்டு வைக்க வேண்டும்.
- வயலில் பறவை இருக்கைகள், குளவி குடில்கள் அமைக்க வேண்டும்.
- நெல் பயிருக்கு வரப்புகளில் பயறு வகை செடிகளான தட்டைப்பயறு, உளுந்து போன்றவை பயிரிட வேண்டும் அல்லது சூரியகாந்தி முதலியவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கலாம்.
- நெல் பயிரில் துார் கட்டும் பருவத்திலும், பருத்தியில் 50 – 55 நாட்கள் வரையிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- கரும்பு சாகுபடிக்கு பின், அதன் கழிவுகளை வயலில் எரிப்பதை தவிர்த்து மண் வாழ் நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் பொருளாதார சேதங்களை அறிந்து தாவரம் சார்ந்த பூச்சி மருந்துகள், நுண்ணுயிர் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
- பூச்சி மருந்துகளை மாலை நேரங்களில் சரியான அளவில் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம்.
- இம்முறையினால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பயிர் பாதிப்பு அடைவதை தடுக்கலாம்.
- தென்னந்தோப்பு, சூரியகாந்தி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து, தேனீ வளர்த்து அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
- பருத்தி, காய்கறி தோட்டங்களில் சுற்றிலும் தேன் மகரந்தங்கள் அதிகம் உள்ள பூக்கள் கொண்ட மக்காச்சோளம், செண்டுப்பூ, சூரியகாந்தி, சோம்பு, எள், கொத்தவரை, வெண்டை போன்றவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தொடர்புக்கு 9443570289 .
எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்