நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை

எண்டோசல்பான் பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். கேரளா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் இந்த பூச்சி கொல்லியை தடை செய்துள்ளனர். நம் மத்திய சர்காரோ, இந்த மருந்தை தடை செய்ய பத்து வருடம் கேட்டது. இப்போது  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு இந்த மருந்திற்கு இடை கால தடை கிடைத்து உள்ளது..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து 81 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், பெரும்பாலான மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்திக்கும், அதன் விற்பனைக்கும் நாடு முழுவதும் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. எண்டோசல்பானுக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மற்ற விஷயங்களை விட, மனித உயிரே மேலானது. ஆகவே, எண்டோசல்பான் உற்பத்திக்கும், விற்பனைக்கும், அதை பயன்படுத்துவதற்கும் 8 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த இடைக்கால உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ், இந்த கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகள் அடிப்படையிலும், முன்னெச்சரிக்கை அடிப்படையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஆகவே, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை அதிகாரிகள் உடனடியாக முடக்க வேண்டும்.

எண்டோசல்பான் மருந்து, மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து இரண்டு வெவ்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கைகளை ஒன்றாக இணைத்து, 8 வாரங்களுக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

எண்டோசல்பான் மருந்தை தடை செய்ய வேண்டுமா? இருப்பு வைக்கப்பட்ட மருந்து, படிப்படியாக அழிக்கப்பட வேண்டுமா? சர்ச்சைக்குரிய எண்டோசல்பான் மருந்துக்கு மாற்று ஏதாவது உண்டா? என்பது பற்றி நிபுணர் குழுக்கள் தங்களது அறிக்கைகளில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நன்றி: கூடல் இணையத்தளம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை

  1. முத்துக்கண்ணன் says:

    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதிலும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறப்பது அரிது என்றார் அவ்வையார். அப்படி அழகிய மகனாய், மகளாய் பிறந்த மக்களுக்கு எமனாக எண்டோசல்பான் என்ற மருந்தை ஆளும் மத்திய அரசே வழங்கி கொல்வது சரியா? ஆறறிவு படைத்த மனுஷங்களடா நாங்க என்ற கோபத்தோடு அறிவியலின் ஒரு கொடூர கண்டுபிடிப்பை எதிர்த்து களம் கண்டுள்ளது வாலிபர் பட்டாளம். எதற்கு..
    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. முத்தளமடா, ஸ்வர்க் போன்ற இடங்களில் இப்பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிக்காப்டர் மூலம் முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் ஏற்பட்ட அதிக அளவிலான நோய்கள், சிறுவர், சிறுமியர் மன வளர்ச்சி குறைபாடு, மன நல குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளால் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அனைவராலும் கவனம் பெற்றது. உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க, கேரள அரசாங்கம் 2005 ல் எண்டோசல்பானைத் தடை செய்ததது. இன்றும் அதன் அபாயம் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயிர்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்த பின்னணியில் இதுவரை 500 உயிர்கள் பலியாகியுள்ளன. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர் எண்டோசல்பான் தெளிக்கும்போது அதை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தி பிறகு அதன் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். 9ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செவித்திறனை இழந்திருக்கிறார்கள், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். என்டோசல்பான் மிக சுலபமாக காற்றில் கலந்துவிடும். 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைப் பெய்தால், எண்டோசல்பான் மழை நீரில் கலந்துவிடும். இதனால் மண்ணும், நீரும் விஷமாக மாறியிருக்கிறது. மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும், மனித உடலில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் ‘என்டோகிரைன்’ சுரப்பியை என்டோசல்பான் தாக்குகிறது. இதனை பல்வேறு அறிவியல் ரீதியான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. முக்கியமாக, கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்டகாலம் அதிக அளவிலான எண்டோசல்பான் சுவாசித்தன் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இத்தோடு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் தன்மையையும் பாதிக்கின்றது.
    பருத்தி மற்றும் முந்திரி விளைப்பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் பூச்சி மருந்து உலகின் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதும், பரிந்துரைக்கப்படுவதும் இந்தியாவில் தான் என புள்ளிவிபரங்கள் கூறுகிறது. இந்தியாவில் எண்டோசல்பான் 48 பெயர்களில் விற்கப்படுகிறது. கர்நாடகா, பஞ்சாப் அசாம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், முந்திரி, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது.
    தமிழகத்தில் 2011 மே 20ம் தேதி அன்று வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை பகுதியில் கருமலை குரூப் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் எண்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்ட போது காற்றில் பரவியது. தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மனித வாழ்வுக்கும், மண்வளத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வருகிறது. கேரளவில் தடை இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உடன் தடை செய்யப்பட வேண்டும் என்றபோது தடை செய்வது குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றார் முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள்.

    கடந்த கேரள இடது முன்னணி அரசு தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு, எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்தது. ஆனால், மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்திக்கவோ, உதவிடவோ எந்த முயற்சியும் செய்ய முயற்சிக்கவில்லை. கேரள இடது முன்னணி அரசு எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிவாரணமும், அவரை சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும், இலவச ரேசன் பொருட்களும் வழங்கி காசர்கோடு மாவட்டத்தின் பாதிப்பு கூடுதலாக இருந்த 11 பஞ்சாயத்துகளில் முழுமையாக அமுல்படுத்தியது.
    எண்டோசல்பான் 125 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டிலும் இதற்கு தடைவிதிக்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. எண்டோசல்பானால் மனித உயிருக்கும், சுற்றுச்சுழலுக்கு எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் தலைமையிலும், விவசாய கமிஷனர் தலைமையிலும் இரண்டு கமிட்டிகளை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. எண்டோசல்பான் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமா அல்லது தற்போதுள்ள கையிருப்புகளுக்கு மட்டும் தடைவிதித்து இந்த மருந்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இந்த கமிட்டி அறிக்கை அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. “மற்ற எல்லா விஷயங்களை விட மனித உயிர் மேலானது என்பதால், எண்டோசல்பானை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் எட்டு வார காலத்துக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் லைசென்சை முடக்கி வைக்கும்படியும்“ நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சுற் றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழுவும், 3 ஆண்டு காலம் தீவிர ஆய்விற்கு பின் எண்டோசல்பான் பூச்சி மருந்தை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹோம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண் டோசல்பான் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள 173 நாடுகள் எண்டோசல்பான் போன்ற நச்சுத்தன்மை மிக்க பூச்சிக்கொல்லி மருந்துக்கு சர்வதேச அளவிலான தடை பிறப்பிப்பது குறித்து விவாதித்தன. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகள் எண்டோசல்பானுக்குத் தடை விதித்துவிட்டன. மீதமுள்ள 48 நாடுகளில் 47 நாடுகள், மெளனம் காத்தன. இந்தியா மட்டும் தான் எண்டோசல்பானை தடை செய்யக்கூடாது என வாதிட்டது. உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன. மொத்த உலக அளவிலான உற்பத்தியான 12800 டன்னில், இந்தியாவில் மட்டும் 9000 டன் எண்டோசல்பான் உற்பத்தி செய்யப்படுகிறது.

    எண்டோசல்பான் மருந்தினை தயாரித்த ஜெர்மன் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அதனைவிட குறைவான விலையில் இந்தியாவிலேயே எண்டாசல்பான் மருந்தை தயாரித்ததுதான். இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்து அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே புகார் கூறியுள்ளனர். ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.

    இப்படி கார்ப்ரேட் நிறுவனங்களின் வர்த்தக போட்டியில் சாதாரண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், எதிர்கால சந்ததியினர், மண்வளம் பாதிக்கப்படுவதை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் லாபவெறியில் மனித வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் ஜெயராம் ரமேஷ் ம், சரத்பவாரும் தடைசெய்ய முடியாது என திருவாய் மலர்ந்துள்ளனர்.

    எண்டோசல்பானுக்கு மாற்று தீர்வை பசுமை புரட்சியை ஊக்குவிக்கும் ஆட்சியாளர்கள் உடன் உருவாக்கிட வேண்டும்.
    ரசாயன மருந்துகள் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழு வதும் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உடனடியாக எண் டோசல்பான் மருந்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
    இந்த மருந்தை பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும்.
    சர்வதேச மாநாட்டில், எண்டோசல்பானை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்த வேண்டும்.
    (எண்டோசல்பானின் பாதிப்பை முழுமையாக தெரிந்து கொள்ள ஸ்லோ பாயிஷ்னிங் ஆப் இந்தியா என்ற ஆவணப்படம்( http://video.google.com/videoplay?docid=-6926416900837431282#) Slow Poisoning of India பார்க்கவும்.

    2011 ஜூன் மாத இளைஞர் முழக்கம் இதழில் வந்த கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *