நெற்பயிரில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

தேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களில் குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதனை நோய் என்று அறியாமல் பூச்சியால் வந்த சேதமென்று எண்ணி பூச்சிமருந்துகளை தெளிக்கின்றனர்.

இந்நிலையில் நோய்கள் அதிக அளவில் தென்பட்ட கப்பலூரில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேசியதாவது, ‘‘குலைநோய் வராமல் தடுக்க சூடோமோனாஸ் என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற வீதத்தில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன் அல்லது கடைசி உழவிற்கு முன் 2 கிலோ சூடோமோனாஸை 50 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து ஒரு ஏக்கார் நிலத்தில் இடுவதால் குலைநோயை உருவாக்கும் பூஞ்சாணம் ஆரம்ப நிலையிலேயே அழிக்கப்பட்டுவிடும். குலைநோய் வந்தபின் 1 லிட்டர் நீரில் 2 கிராம் சூடோமோனாஸ்  கலந்து பயிரில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது 1 லிட்டர் நீரில் 1 கிராம் ட்ரைசைக்ளோசோல் மருந்தினை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். நெற்பயிரில் வரக்கூடிய நோய்களின் அறிகுறிகளை விளக்கி இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். 30எலுமிச்சை சாற்றுடன் 15 முட்டைகளை ஒரு பாத்திரத்திலிட்டு மூடி 15முதல் 20 நாட்கள் வரை  வைத்திருந்து பின் 500 கிராம் வெல்லம் கலந்து மீண்டும் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இக்கலவையை நன்கு கலக்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பயிருக்கு தெளித்து அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு பேசினர்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *