நெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ

பருவமழை துவக்கம் காரணமாக நெல்வயல்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.

  • பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஆலாம்பாளையம், களியனூர், எலந்தகுட்டை, தட்டாங்குட்டை, போன்ற பகுதிகளில் ஐஆர் 20 ரக நெல்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப் பூச்சியானது ​ பொன்னி,​​ பி.பி.டி.,​​ ஏ.டி.டி 45,​ 43 உள்ளிட்ட ரகங்களையும் பாதிக்கும். இந்த ரக நெல்லை அதிக அளவில் ஆனைக்கொம்பன் ஈக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும்.
  • தற்போது துவங்கியுள்ள பருவமழையால் இந்த ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.
  • ஆனைக்கொம்பன் ஈ ஒரு கொசு அளவில், அடிவயிறு சிவந்து காணப்படும்.
  • ஈ வகையைச் சேர்ந்த இந்தப் பூச்சி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகவும்,​​ கொசுவைப் போன்று சிறியதாகவும்,​​ நீண்ட கால்களுடனும் இருக்கும்.
  • இந்த ஈ இருந்தால்,​​ தூர்களுக்குப் பதிலாகக் கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும்.​ கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளம் சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையைப்போலத் தோன்றும்.
  • யானைத் தந்தத்தைப் ​ போன்று குழலாகக் காணப்படுவதால் ஆனைக்கொம்பன் என்ற பெயர் பெற்றுள்ளது.
  • இரவில் மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும் இந்த பூச்சிகள், சராசரியாக 150 முட்டைகள் வரை இலைகளில இடும்.தாள்களின் மேல் புறமும்,​​ தேங்கிய தண்ணீரிலும் இடும்.​ இதன் வாழ்க்கை சுழற்சி 20 முதல் 25 நாள்கள் ஆகும்.
  • இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெல் பயிர்களின் குறுத்துகளை துளைத்து குழால்களாக மாற்றிவிடும்.
  • இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
  • நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில்தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • அதிகம் தழைச்சத்து தரும் யூரியா, களர் நிலங்களில் உள்ள பயிர்களை இந்த ஈக்கள் அதிகம் தாக்கும்.
கட்டுபடுத்தும் முறைகள்
  • பரிந்துரை அளவுக்கும் மேல் தழைச்சத்துரங்களை சேர்க்க கூடாது.
  • ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீள்தாடை சிலந்தி, வட்டசிலந்தி, தாவும் சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும்.
  • இதைத் தடுக்க பிளேட்டை கேஸ்டர் ஒரைசே எனும் புழு ஒட்டுண்ணி இயற்கையிலேயே இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது.​ இந்த ஒட்டுண்ணிகள் கொண்ட தூர்களைச் சேகரித்து பத்து சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரப்பலாம்.
  • மேலும்,​​ பொரேட் என்ற குருணை மருந்தை ஓர் ஏக்கருக்கு 4 கிலோ அல்லது பிப்ரோனில் 10 கிலோ ​(தூவும்)​ தூளை வயலில் இடவும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அடிவேரோடு நறுக்கி அழிக்க வேண்டும்.
  • நெல் பயிர்களின் அடியில் வேப்பம் புண்ணாக்கு அதிகமாக இடவும்.
  • ஈ தாக்குதல் 10 சதத்தை கடந்திருந்தால்  குளோர்பைரிபாஸ் போன்ற பூச்சிகொல்லி மருந்துகளை வேளாண்மைத்துறையினரின் பரிந்துரையின் பேரில் தெளிக்கலாம்.
  • ஒருங்கிணைந்த முறையை பின்பற்றினால் இந்த ஈயை முற்றிலுமாக அழித்துவிடலாம்.

இவ்வாறு பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *