அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்திமுறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
- நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல்கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதமாவதைத் தடுக்கலாம்.
- அறுவடையின்போது, ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
- நெல் மணிகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய அறுவடை செய்த நெல்லை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து ஈரப்பதம் 13 சதவீதத்துக்கு குறைக்க வேண்டும். இதனால் பூஞ்சாண வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
- முதிர்ந்த நெல் மணிகளில் இருந்து கிடைக்கும் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காயவைக்கக் கூடாது.
- அறுவடை செய்த நெல்லை சுத்தம் செய்து சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, மூட்டைகளை அடுக்கி வைத்தால் சுவற்றின் ஈரப்பதம் நெல்மணிகளைத் தாக்காது.
- சேமித்து வைத்துள்ள நெல்லில் அந்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை 10 மில்லி லிட்டரில், 1 லிட்டர் நீரில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.
- பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியே பிரித்துவிட வேண்டும்.
- ரகங்கள் வாரியாக தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்று நல்ல லாபம் பெறமுடியும் என தெரிவித்தனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்