பயிர் சாகுபடியில் நூற்புழுப் பாதிப்பு சமாளிப்பது எப்படி

பயிரில் பூச்சிகளின் சேதத்தைப் போல் மறுபுறம் நூற்புழுக்களால் ஏற்படும் சேதத்தையும் அவற்றின் அறிகுறிகளையும் பற்றிப் பார்ப்போம். இந்நூற்புழுக்களால் பயிரில் 13 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூற்புழுக்கள் பூமியில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வியாபித்துள்ளது.

கடல் மட்டத்துக்குக் கீழும் உயரமான மலை உச்சி வரையிலும் அதிக வெப்பம் உள்ள பகுதிகளிலிருந்து அதிகப் பனிப்பொழிவு உள்ள நிலங்களிலும் இந்நூற்புழுக்கள் பரவியுள்ளன. தரிசு நிலத்திலும் சாகுபடிக்கு ஏற்ற விளைநிலத்திலும் இந்நூற்புழுக்கள் காணப்படுகின்றன.

இவை கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய அளவிலிருந்து திமிங்கிலத்தைத் தாக்கும் 8 மீட்டர் நீளமுடையவைவரை இருக்கும். இந்நூற்புழுக்கள் மனிதன் உடலையும் விலங்குகளையும் சில வகைத் தாவரங்களையும் தாக்கக் கூடியவை. இதனால் பொருளாதார இழப்பும் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நூற்புழுக்களில் இரு வகை உண்டு.

1. அங்ககப் பொருட்களையும் பிற நுண்ணுயிர்களையும் உணவாக உட்கொள்ளும் நூற்புழுக்கள்.

2. பிற உயிரினங்ளைச் சார்ந்து வாழும் நூற்புழுக்கள்.

இரண்டாம் வகை நூற்புழுக்களே பயிரைத் தாக்கிச் சேதம் ஏற்படுத்துகின்றன. இத்தகைய பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள் கண்ணுக்குப் புலப்படாததாகவும் புழு உருவத்தை ஒத்தும் நிறமற்றதாகவும் ஆண், பெண் உருவ வேற்றுமையுடன் பெரும்பாலும் ஒரு மாதம் ஆயுளைக் கொண்டதாகவும் உள்ளன. தாவர நூற்புழுக்கள் பொதுவாக வேர்ப்பகுதியினைச் சுற்றி சுமார் 2.5. செ.மீ. ஆழம் வரை காணப்பட்டாலும் நீண்ட கால மரப்பயிர்களில் வேரின் ஆழம் வரை காணப்பட்டாலும், வேரின் வளா்ச்சி உள்ள ஆழம்வரை காணப்படுகிறது. புதியதாக உறிஞ்சும் வேர்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.

இந்தத் தாவர நூற்புழுக்கள் பயிரைத் தாக்கும் பகுதிகளை வைத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. வேருக்கு வெளியிலிருந்து பயிரைத் தாக்குதல்.

2. வேரின் உள்ளேயும் வெளியே பாதியுமாக இருந்தவாறு தாக்குதல்.

3. வேரினுள் முழுவதுமாக உட்புகுந்து ஓரிடத்திலேயே தாக்குதல் அல்லது இடம் பெயர்ந்தவாறு தாக்குதல்.

இந்நூற்புழுக்கள் வளரும் தாவரங்களின் வேர் மற்ற பாகங்களிலிருந்து செல் ரசத்தை உறிஞ்சி உண்ணும். இதற்கேற்றாற் போல ஊசி போன்ற அலகு அல்லது உணவுக் குழல் உண்டு.

இந்நூற்புழுக்கள் தாவரச் செல்களில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து பயிர் மாறுதலுக்குக் காரணமாகிறது. வளரும் வேரின் நுனிப்பகுதி பாதிக்கப்படுவதால் செடிகளின் வளர்ச்சி குறைவது, விதை முளைப்பின்போதே பாதித்தால் கன்றுகள் பெருமளவு மடியவும் காரணமாகிறது. இதன் பாதிப்பால் நீர், சத்துப்பொருட்களைக் கிரகிக்கும் தன்மை பயிருக்குக் குறைகிறது. இது போக மறைமுகமாகவும் இந்நூற்புழுக்களின் பாதிப்பால் பாக்டீரிய, பூஞ்சாணச் சேதம் பயிரில் உண்டாகக் காரணமாகிறது.

நூற்புழுக்களின் சேதத்தை முதலில் சாகுபடி செய்யும் பயிரில் கண்டறிவது அவசியமானது. நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பயிர் ஆங்காங்கே திட்டுத் திட்டாக வெளிறி, வளர்ச்சி குன்றிப் போகும். வெவ்வேறு வகையான நூற்புழுக்களின் தாக்குதலைப் பொறுத்து விதை, இலை, தண்டு, மணி, கதிர், வேர், கிழங்குகள் ஆகியவை உரு மாறி மகசூல் இழப்பையும் சந்தை வாய்ப்பையும் இழக்கும்.

மண்ணில் காணப்படும் நூற்புழுக்கள் விதை, நடவுக்கு பயன்படுத்தப்படும் நாற்றுகள், கன்றுகள் மூலம் பரவுகின்றன. இவ்வகையில் நூற்புழுக்கள் பாதிக்கப்படாத இடத்துக்கும் விதை/ நடவுப் பொருட்கள் மூலம் இந்நூற்புழுக்கள் பரவிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆகையால் நூற்புழுக்கள் தாக்காத வளமான விதை, நடவுப்பொருட்களை வரும் முன் காப்போம் என்ற முறையில் தேர்ந்தெடுத்து விதைக்கவோ நடவோ செய்யலாம்.

நூற்புழுக்களால் ஏற்படுத்தப்படும் சேத அறிகுறிகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து, நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருப்பதால் மண், பாதிக்கப்பட்ட செடிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி உறுதிசெய்வது அவசியமாகிறது.

பெரும்பாலும் நூற்புழுக்கள் செடியில் இளம் சல்லிவேர்களி லிருந்துதான் சாற்றை உறிஞ்சுகின்றன. நூற்புழுக்கள் அதிகம் காணப்படும் செடியின் சல்லி வேர், வேரைச் சுற்றியுள்ள மண் ஆகிவற்றின் மாதிரிகளைத்தாம் சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

காய்ந்த மேல் மண்ணை நீக்கி சுமார் 1 முதல் 3 செ.மீ. கனத்துக்கு மண்வெட்டியால் சுரண்டி மேல்மண்ணை நீக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த மேல் மண்ணை நீக்கிய பின்பு செடிக்கருகில் சுமார் 15 செ.மீ. ஆழத்துக்கு ‘V’ வடிவிலான பள்ளம் எடுக்க வேண்டும். இதில் குறுக்கிடும் சல்லி வேர்களையும் பள்ளத்தின் இரு கரைகளிலும் (இரு பக்கங்களிலும்) மேலிலிருந்து கீழாகச் சுமார் 2 செ.மீ. அளவுக்கு மண்ணையும் பைகளில் சேகரிக்கவும். இவ்வாறு தோட்டத்தில் பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும் இடங்களிலிருந்து சுமார் 10 செடிகளின் வேர் / கிழங்கு, மண் ஆகியவற்றைச் சேகரித்து நன்கு கலந்து பின் 500 கிராம் மண்ணும் 50 கிராம் வேரும் வரும்படியாக சுருக்கி மாதிரி சேகரிக்கலாம்.

சேகரிக்கப்பட்ட மண், வேர், கிழங்கு மாதிரிகளை ஈரம் போகாமல் பாலிதீன் பைகளில் போட வேண்டும். இத்துடன் இரண்டு தாள்களில் உழவரின் முழு முகவரி, வயல் பெயர், அல்லது பயிர் ரகம் மண் மாதிரி எடுத்த தேதி முதலிய விவரங்களை அழியாத மையால் எழுதி பாலிதீன் பைகளில் வைத்துக் கட்ட வேண்டும்.

இவ்வாறு பல்வேறு இடங்களில் சேகரித்த மாதிரிகளை ஒரு அட்டை பெட்டியில் இட்டுத் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வேளாண் கல்லூரியின் பயிர் பாதுகாப்புத் துறையை அணுகலாம். அல்லது பேராசிரியர், தலைவர் நூற்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரிக்கு மாதிரியை அனுப்பி வைத்தால் பரிசோதித்து ஒரு வார காலத்துக்குள் சேதம் உள்ளதா, என்பதைத் தெரிவிப்பார்கள்.

அதன் அடிப்படையில் நூற்புழுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கட்டுரையாளர்கள்

தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *