ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் விளக்குப் பொறிகளின் அவசியத்தைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இவ்வகையில் விளக்குப் பொறிகள் மட்டுமல்லாது பல்வேறுபட்ட அனுபவங்களின் அடிப்படையில் கிராமங்களில் உழவர்கள் பயன்படுத்தும் செயல் பொறிகளும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளன.
உதாரணமாக, தென்னை மரங்களில் உச்சியில் காண்டாமிருக வண்டு என்ற பெரிய வடிவிலான வண்டுகள் தென்னை மரங்களின் குருத்தைக் கடித்து தின்று சேதப்படுத்தும். இவ்வகை வண்டுகளைக் கவர தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே நிலப்பரப்பில் மண்பானைகளை வைத்து அதனுள் பாதியளவு தண்ணீா் ஊற்றி ஆமணக்கு விதையை நசுக்கி அதனுடன் புண்ணாக்கை இட்டு ஊற வைப்பதுண்டு. இதனுடன் கூடவே பசுமாட்டுச் சாணியைக் கரைத்தும் பயன்படுத்தலாம்.
இதிலிருந்து வரும் ஒரு நெடி அல்லது வாசனை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காண்டாமிருக வண்டுகளை ஈா்த்துப் பானையினுள் விழச்செய்யும். பின் அவ்வண்டுகள் பானையிலுள்ள கரைசலிலிருந்து வெளி வர இயலாமல், பானைக்குள்ளேயே செத்து மடியும். இதுவும் ஒரு வகைப் பொறி.
இதைப் போல் நிலக்கடலைப் பயிரை எடுத்துக்கொண்டால் புரொடீனியா என்ற ஒரு வகைப் புழு, சிவப்புக் கம்பளிப்புழு ஆகியவற்றின் சேதம் அதிகமாகும்போது ஒரு வகை பொறி பயன்படுத்துவது உண்டு. இப்புழுக்கள் படை படையாக நிலக்கடலைப் பயிரின் இலைகளைக் கடித்துத் தின்று சேதப்படுத்தும்.
இவ்வகைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு தோட்டத்துக்கும், மறு தோட்டத்துக்கும் இடையே ஒரு அடி ஆழத்துக்குக் குழி எடுத்து அதில் எருக்க இலை, இலைகளை அடியில் பரப்பி வைக்கும்போது இப்புழுக்கள் இக்குழிகளில் விழுந்து மேலே ஏற இயலாமல் இறந்து விடுவது உண்டு. பின்னர் பொறுக்கி எடுத்துத் தீயிட்டு அழிக்கலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் முதலாவதாகப் பல்வேறு வகைப் பொறிகளை வைத்து பூச்சிக் கட்டுப்பாடு மேற்கொள்ளலாம்.
இதனால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதில்லை. இப்பொறிகளை அடுத்துப் பூச்சியைப் பூச்சியால் அழிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை என்ற ஒரு வகை உத்தியின் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கலாம். அவற்றில் ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், நுண்ணுயிர் நோய்க் கிருமிகள் ஆகியவை அடங்கும்.
1. பூச்சியினத்தைச் சார்ந்த 380 ஒட்டுண்ணி வகை தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க வல்லதாக உள்ளன. அதைப் போல் 220 இரை விழுங்கி வகைகள் பூச்சியினத்தில் உள்ளன. இவை தவிர பூச்சியினம் அல்லாத பறவையினங்களும், பூச்சியினங்களைத் தின்னும் இரை விழுங்கிகளாகச் செயல்படுகின்றன. இவை தவிர நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் பூச்சியினங்களை அழிக்க வல்லதாக உள்ளன. பாக்டீரியா, பூசணங்கள், நச்சுயிரிகள், புரோட்டசோவா, நுாற்புழுக்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
தற்போது நம் மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வகை வெள்ளை ஈக்கள் தென்னை, பாக்கு ஆகிய மரங்களின் ஓலைகளுக்கடியில் குஞ்சுகளாகவும் முதிர்ந்த வெள்ளை ஈக்களாகவும் இருந்து சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்துகின்றன. இதன் சேதத்தால் முதிர்ச்சியடைந்த நிலையில் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட ஓலைகளில் மேற்பரப்பிற்குப் பரவி கருஞ்சணம் வளர்ந்து ஓலைகள் முழுவதும் கருகி விடுகிறது.
இவ்வகைச் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த நாம் ஏற்கனவே கூறிய விளக்குப்பொறிகளும் ஒட்டுண்ணிகளும் இரை விழுங்கிகளும் நல்ல பலன் தருவதாக உள்ளன. இப்பூச்சி அதிக அளவில் பரவாமல் தடுக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் உள்ளன.
மஞ்சள் நிறத்துடன் கூடிய ஓட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி தரைமட்டத்திலிருந்து உயரத்தில் (5 அடி நீளம், ஒன்றரை அடி உயரம் உடையது) ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட ஓலைகளின் மேல் அதிக விசையுடன் நீரைக் குழாய்களின் வழியாக அடிப்பதன் மூலம் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈக்கள் அதிக அளவு பரவும்போது பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே பெருக ஆரம்பிக்கும். என்கார்ஸியா என்னும் ஒரு வகை ஒட்டுண்ணிகள் அதிக அளவில் பெருகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் அதிக அளவில் குறைக்கும்.
கிரைசோபா எனும் இரை விழுங்கிகள் இப்பூச்சியின் இளங்குஞ்சுகளை விரும்பி உண்பதால் இப்பூச்சிகளால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் முட்டைகள் அடங்கிய அட்டைகளைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அல்லது மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்திலிருந்து பெற்று தோட்டத்தில் கட்டிவைக்கலாம்.
தோப்புகளில் தட்டைப்பயறு போன்ற பயறு வகைப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுவதும், மஞ்சள் நிறப் பூச் செடிகளான சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புப் பயிராக பயிரிடுவதாலும் இவ்வகைப் பூச்சியை அழிக்கலாம். நன்மை செய்யும் பூச்சிகளின் இருப்பை அதிகரித்து, இத்தீமை செய்யும் பூச்சிகள் ஏற்படுத்தும் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்