பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

பயிரின் சேதாரத்திற்கு காரணம் பூச்சிகளா, நோய் காரணிகளா என்பதை சரியாக வேறுபடுத்திப் பார்த்து, அதற்கான மருந்தினை தெளிக்க வேண்டும். மாறாக பூச்சிகளுக்கு பூஞ்சானக் கொல்லி மருந்தையும், நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்தையும் அடிப்பதினால் சேதாரத்தைக்
கட்டுப்படுத்த முடியாது.
சேதத்தன்மை அறிதல்:

பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தி இருந்தால், அதன் சேதத்தன்மையை வேறுபடுத்த வேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலையை கடித்து உண்ணும் பூச்சிகள், துளையிடும் பூச்சிகள் என மூன்று வகைப்படும். அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, செதில்பூச்சி போன்றவைகள் இலைகளின் அடியில் இருந்து அவற்றின் பச்சையத்தை உறிஞ்சி உண்ணும் வாய்ப்பாகம் கொண்டவை. எனவே இவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் எனப்படுகின்றன.
படைப்புழு, இலைச்சுருட்டுப்புழு, காடிப்புழு, கம்பளிப்புழு, சாம்பல் வண்டுகள் போன்றவை இலைகளை கடித்து உண்ணும் வகையை சேர்ந்தது.
மூன்றாவதாக நெல் தண்டு துளைப்பான், பருத்துக் காய்ப்புழு ஆகியவை மா, முந்திரி, பலா, காபி, கத்தரி பயிர்களின் உள்ள துளைப்பான்கள் போன்றவைகளாகும்.
பூச்சிக்கொல்லி தேர்வு:

பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பண்பைக் கொண்டு சாறு உறிஞ்சும் பூச்சிகள் இருப்பின் செடியினுள் ஊடுருவிச் செல்லும் தன்மையுள்ள விஷங்களான இமிடோகுளோபிட், அசிபேட் அசிட்டாம்பிரிட், தயாமீத்தாக்சோம், டைமீத்தோயெட், பிப்ரோனில், கார்போசல்பான் போன்ற மருந்துகளை தெளிக்கலாம்.

இலைகளை கடித்தும் உண்ணும் பூச்சிகளாக இருப்பின் குளோரிபைரிபாஸ், டைக்ளோர்வால், குயினால்பாஸ், புருபென்டியமைடு, கார்டாப், இன்டாக்சோகார்ப் போன்ற மருந்துகள் அடிக்கலாம்.
குறிப்பாக செயற்கை பைரித்ராய்டுகள் துளைப்பான்களை நன்கு கட்டுப்படுத்தும் திறன் கொண்டவையாகும்.
எனினும் இவை சாறு உறிஞ்சும் பூச்சிகளை அதிகப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே அதுபோன்ற மருந்துகள் பயிர் மூப்பின் போது வரும் பூச்சிகளை அழிக்கவே பரிந்துரைக்கப் படுகின்றன.
மருந்தடிப்பும் உத்திகளும்:

பொதுவாக காலை, மாலையில் மருந்தடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ‘மாலையில் மருந்தடிக்க மாளும் பூச்சிகள்’ என்றால் அது முற்றிலும் உண்மை. ஏனெனில் மாலை நேரங்களில் தாய் அந்துப்பூச்சிகள் அதிகமாக தென்படும்.
இலைகளில் உள்ள சிறுசிறு துளைகள் மாலை நேரங்களில் தான் திறக்கும் என்பது இதன் பயன் எனக்கூறலாம். மருந்தடிக்கும் போது பயிரை மட்டும் பாராமல் வரப்புகளுக்கும் களைச் செடிகளுக்கும் படும்படி தெளிக்க வேண்டும். ஏனெனில் மருந்தடிக்கும் போது பூச்சிகள் மருந்தின் வாடையை நுகர்ந்து தெளிப்பதற்கு முன்பே அருகிலுள்ள வரப்புகளிலோ, களைச்செடிகளிலோ, பக்கத்து வயலுக்கோ செல்ல வாய்ப்புள்ளது. பின் மருந்தின் விஷத்தன்மை குறைந்தவுடன் மறுபடியும் சேதத்தை உண்டாக்கும்.

எனவே விவசாயிகள் விழிப்புடன் இருந்து பயிர்களில் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டும்.
ந.ஜெயராஜ்
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்,மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *