பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்

பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறை குறித்து கூறும், துாத்துக்குடி மாவட்ட வேளாண் அலுவலர், ‘பூச்சி’ நீ.செல்வம் கூறுகிறார:

  • பருவ மழை பெய்தாலும், பொய்த்தாலும், அந்தந்த பருவத்தில், பூச்சி கள் சரியாக வந்து விடுகின்றன. பெரும்பாலான பூச்சிகள், களைச் செடிகளில் தான் இருக்கும் என்பதால், அவற்றை பிடுங்கிவிடலாம்.
  • மழைக்காலம் துவங்கும் முன், வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்காமல் இருக்க, இஞ்சி, பூண்டு கரைசல் தெளிக்கலாம். இதனால், வெட்டுக்கிளி உள்ளிட்ட, பல பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம். கால் கிலோ பூண்டை உரலில் இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். 3 கிலோ காம்பு கிள்ளிய பச்சை மிளகாய், 100 கிராம் இஞ்சியை தனித்தனியாக மை பதத்தில் அரைக்க வேண்டும்.அடுத்த நாள், 10 லி., தண்ணீரில் இவற்றை கலந்து வடிகட்டி, ஒட்டும் திரவத்துக்காக, 100 கிராம் காதி சோப்பை கலக்க வேண்டும்.இக்கரைசலிலிருந்து அரை லிட்டரை எடுத்து, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இக்கரைசல் எரிச்சலுாட்டும் தன்மை கொண்டிருப்பதால், பூச்சிகள் ஓடிவிடும்.
  • மழைக்காலத்தில் நெல் நாற்றை நடும்போது, நுனியை கிள்ளி நடவு செய்ய வேண்டும்.ஏனெனில், நாற்றின் நுனியில் தான், குருத்துப்பூச்சிகள் முட்டையிடும். ஒரு முட்டைக் குவியலில், 200 முட்டைகள் வரை இருக்கும். அதையும் மீறி தாக்கும் பூச்சிகளை, ஏக்கருக்கு ஒன்று என, விளக்குப் பொறியை வைத்து அழிக்கலாம்.நடவு செய்த, 15ம் நாளுக்கு மேல் நெல் பயிரில், இலை சுருட்டுப் புழு தாக்கத்தால், வெள்ளை நிற கோடு விழும். இந்த அறிகுறி தென்பட்டால், மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம், வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிக்கலாம்.
  • நிலக்கடலையில் இலை மடக்குப்புழு தாக்காமல் இருக்க, அதை, வயலில் ஊடுபயிராகவும், வரப்புப் பயிராக கம்பையும் விதைத்தால், கம்பு பயிர்களிலிருந்து வரும் மணம், இலை மடக்குப்புழுவை உண்டாக்கும் தாய் பூச்சிகளை விரட்டி விடும்.மழை பெய்தவுடன், பயிர் வளர்ச்சிக்காக அதிக ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், இலையின் நிறம் கரும்பச்சையாக மாறுவதால், நாமே பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்தது போலாகி விடும்.பூச்சிக்கு நிறத்தை பகுத்தறிய முடியாது என்றாலும், பயிர்களில் உருவாகும் ஒருவித மணம், அவற்றை கவர்ந்திழுக்கிறது. அதனால், ரசாயன உரத்தை தவிர்த்து, ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினால், பூச்சிகளின் தாக்குதல் இருக்காது.

தொடர்புக்கு: 09443538356

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *