மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்

பல வகை பயிர்களை தாக்கும் மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டுபடுத்தும் ஒட்டுண்ணி பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம்.

பப்பாளி, மரவள்ளி மற்றும் களைச்செடிகளில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த திண்டிவனம் எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ஒட்டுண்ணி இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மாவுப்பூச்சியி 60-க்கும் மேற்பட்ட தாவரங்களை தாக்குகிறது.குறிப்பாக பப்பாளி,மரவள்ளி, காட்டாமணக்கு, பருத்தி, துவரை, மல்பெரி, செம்பருத்தி, காய்கறிப்பயிர்கள், பழப்பயிர்கள், பூப்பயிர்கள்,அலங்காரச் செடிகள் மற்றும் களைச்செடிகளும் இதில் அடங்கும்.

பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்று அழைக்கப்படும் இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலால் இலைகள், நுனிக்குருத்துகள், பூக்கள், பழங்கள் பாதிக்கப்படுவதோடு செடி வளர்ச்சியின்றி காணப்படுவதோடு தேன் போன்ற திரவம் ஒழுகும்.

தாக்குதல் தீவிரமடையும் போது பாதிக்கப்பட்ட செடிகள் காய்ந்து இறந்து விடும். தேனொழுகளால் இலைகளின் மீது கரும்பூசணம் படர்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளின் அருகில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்.
பப்பாளி மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த பெங்களூருவிலுள்ள தேசிய வேளாண் முக்கியத்துவ பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தின் மூலமாக மூன்று ஒட்டுண்ணிகள் போர்டோரிக்கோ Puerto Rico தீவுகளிலிருந்து தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் மூலமாக இலவசமாக அளிக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அசிரோப்கஸ் பப்பாயே என்றழைக்கப்படும் ஒட்டுண்ணி குளவிகள் 50-60- முட்டைகள் வரை இடும். 16-18 நாட்களுக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்கும். வளர்ந்த ஒட்டுண்ணிக்குளவி 5- 7 நாட்கள் வரை உயிர் வாழும்.
இவ் ஒட்டுண்ணிக்குளவிகள் மாவுப்பூச்சியின் இரண்டாம் வளர்நிலை அல்லது இரண்டாம் பருவ இளம் பூச்சியைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

பப்பாளி மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அசிரோபேகஸ் பப்பாயே ஒட்டுண்ணியை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் அதிக அளிவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த வேண்டிய இந்நேரத்தில் இந்த ஒட்டுண்ணிக்குளவிகளை திண்டிவனத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் 04147250293 மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 04147250001 என்ற எண்களில் விவசாயிகள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாமென பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் வைத்தி.ராதாகிருஷ்ணன் மற்றும் பயிர் நோயியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் வை.செந்தில்வேல் ஆகியோர் கூறியுள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்

  1. Jayaraman says:

    ஐயா
    மரவள்ளி செடியில் மாவுப்பூச்சியை கட்டுபடுத்த ஒட்டுண்ணி எங்கு கிடைக்கும்.தயவுசெய்து கூறவும்.
    ஜெயராமன்
    ப.வேலூர் TK
    நாமக்கல் Dt. 9486103017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *