வெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்!

ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு போன்ற பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைககள் குறித்து பார்ப்போம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

வெண்டையில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்:

பொதுவாக வெண்டை சாகுபடி செய்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அஸ்வினி, இலைப்பேன், தத்துப்பூச்சி வெள்ளை ஈ, செம்பேன் முதலியவை அதிகமாக தாக்க ஆரம்பிக்கும். அவற்றுக்கு நாம மஞ்சள் நிறப்பொறி அல்லது ஊதா நிறப்பொறி வைத்து இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
பச்சைப்பூச்சி செடியில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி மஞ்சளாகி உதிர்ந்து விடும். நன்றாகக் காய்க்காது. இயற்கை முறையில் ஊதா நிறப்பொறி வைக்கலாம் அல்லது அசிபேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அவற்றுடன் அசிட்டமா பிரைடு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈ செடியில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடி வெளுத்து இளமஞ்சள் நிறமாக ஆங்காங்கே காணப்படும். இவை வைரஸ் நோய் எனப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறை:

 • இந்த நோய் உள்ள செடிகளை வயலில் இருந்து அகற்றி விடவேண்டும். மஞ்சள் அட்டையில் கிரீஸ் அல்லது விளக்கெண்ணெயை தடவி வைத்து கட்டுப்படுத்தலாம். அல்லது நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம்.  ஒரு லிட்டர் தண்ணீருக்கு அசிட்டமா பிரைடு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அடிச்சாம்பல் நோய் அறிகுறி:

 • செடியின் பின்பகுதியில் இலையில் சாம்பல் நிறத்துடன் காணப்படும். பொதுவாக பனிக்காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

 • சல்பர் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பச்சைப்புழு தாக்குதல்:

 • வெண்டை நடவு செய்த 45 நாள்களில் காய்வர ஆரம்பிக்கும். செடியில் பச்சைப்புழுவின் தாக்குதல் இருந்தால் காய் வளைந்து காணப்படும். இதற்கு பிவேரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 • நுண்ணூட்டச் சத்தான போரான் பற்றாக்குறை ஏற்பட்டாலும் காய்வளைந்து காணப்படும். இதற்கு, நடவு செய்த ஒரு வாரத்துக்குள் போரான் எனும் நுண்ணூட்டச்சத்து ஏக்கருக்கு 10 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது போடவேண்டும்.
 • இயற்கை முறையில் போரான் பற்றாக்குறையை போக்க எருக்க இலையை உழவு செய்வதற்கு முன்பு வயல் முழுதும் பரப்பிவிட்டு பிறகு உழவு செய்ய வேண்டும்.
 • மேலும் வெண்டைசெடியில் தழைச்சத்து (பச்சையம்) அதிகம் இருந்தால் சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் தென்படும். அவற்றின் தாக்குதலை குறைக்க மஞ்சள் நிறப்பொறி  (ஒட்டுப்பொறி) ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

கத்தரியில் தண்டுப்புழு தாக்குதல்:

 • அறிகுறி குருத்துப்பகுதி வாடி காணப்படும் ஒடித்து பார்த்தால் உட்புறம் புழு தென்படும்

கட்டுப்படுத்தும் முறை:

 • செடியின் வாடிய பகுதியை அகற்றி விட வேண்டும். டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை 4 சிசி  ஏக்கருக்கு கட்டிவிட  வேண்டும். (அ) இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிக்கலாம்.
 • ஒரு கிலோ பூண்டு, அரைக் கிலோ இஞ்சி,அரைக் கிலோ பச்சை மிளகாய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நைசாக அரைத்து 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து  மாலை வேளையில் பயிருக்கு தெளிக்கலாம்

காய்ப்புழு தாக்குதல்:

 • பூ, பிஞ்சு, காய்களில் புழு துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை:

 • டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 4 சிசி கட்டலாம்.
 • ஒரு லிட்டர் தண்ணீருக்கு நாட்டு சர்க்கரை 5 கிராம் பிவேரியா பேசியானம் 5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ரசாயனமுறை:

 • ஒரு லிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ்  4 மில்லி என்ற அளவில் கலந்து மாலைவேளையில்  கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈ தாக்குதல்:

 • வயலுக்குள் நுழைந்தால் சிறிய வெள்ளை நிற பூச்சி பறக்கும்.  இவை இலையின் சாற்றை உறிஞ்சி, செடியை வளர்ச்சி குன்றச் செய்யும்

கட்டுப்படுத்தும்முறை:

 • இயற்கை முறை மஞ்சள் தகட்டில் (நிறப்பொறி) கிரீஸ் தடவி ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில்  செடிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும்.

ரசாயன முறை:

 • ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1 மில்லி  4 மில்லி நிம்புசிடின் சேர்த்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு பிரைடு ஒரு கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “வெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *