வேம்பும், வேளாண் பயன்களும்!

வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சி கொல்லிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். 

இதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், உதவிப் பேராசிரியர்கள் க.ராஜ்குமார், ம.கலைநிலா ஆகியோர்கூறியது:

வேப்ப மரத்தை கிராமத்தின் மருந்தகம் எனக் கூறலாம். வேம்பின் இலை, காய், பழம், விதை, வேர், பூ மற்றும் பட்டை ஆகியவை ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேம்பின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் கொண்டவை.

மேலும், வேம்பின் பல்வேறு பாகங்கள் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலை, கொட்டை, எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு போன்ற பொருள்கள் தாவர பூச்சிக் கொல்லியாக செயல்படுகின்றன. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண் மற்றும் பயிர்ப் பாதுகாப்பிலும் பெரிதும் உதவுகிறது.

வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற கசப்பு வேதிப்பொருள் மற்றும் சலானின், மிலியன்டியால் போன்ற இதர பொருள்களும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் பொருள்களில் குறிப்பாக, வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம், வேப்பம் பிண்ணாக்கு 5-12 சதவீதம் மற்றும் வேப்ப எண்ணெய் 0.5-1 சதவீதம் அதிகமாக பயிர்ப் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம்.

இதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலை தின்னும் புழுக்களை நன்றாகக் கட்டுப்படுத்தலாம். இந்த வேதிப் பொருள்கள் பூச்சியினை பயிர்களின் மேல் அண்டவிடாமல் விரட்டி, பூச்சியினை முட்டையிடாமலும் தடை செய்கின்றன. வேம்புப் பொருள்கள் தெளிக்கப்பட்ட பயிர்களை புழுக்கள் உண்ணாமல் தவிர்த்துவிடும். மேலும், சிறிதளவு உண்ணும் புழுக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, இறந்துவிடும்.

பயன்கள்:

நெல், பயறு, பருத்தி, காய்கறி மற்றும் பழ மரங்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் இனங்களையும் மற்றும் இலைகளை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்தும். இதனை பதினைந்து நாள்கள் இடைவெளியில் 3 அல்லது 4 முறை தேவைக்கேற்ப தெளித்தால், நல்ல பலனளிக்கும். மேலும், உயிரியல் முறை பூச்சி மேலாண்மையில் சிறந்த பங்கு வகிக்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல், தெளிக்கப்பட்ட பயிர்களின் மேல் நஞ்சு இல்லாமல் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.

வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் (100 லிட்டருக்கு) தேவையான பொருள்கள்:

வேப்பங்கொட்டை (நன்கு காய்ந்தது) 5 கிலோ, தண்ணீர் 100 லிட்டர், காதி சோப்பு 200 கிராம், மெல்லிய துணி. நன்கு காய்ந்த வேப்பங்கொட்டையை அரைத்து அவற்றை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை நன்கு கலக்க வேண்டும். அவ்வாறு கலக்கும் போது பால் போன்ற வெண்மை நிறத்தில் கரைசல் தென்படும். நன்கு கலந்த கரைசலை மெல்லிய துணியால் வடிகட்டி, அதன்பின் கரைசலில் காதி சோப்பை கரைத்து நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: வேம்பின் பழங்களை சரியான பருவத்தில் சேகரித்து, நிழலில் உலர வைத்து சேமித்து வைக்கலாம். எட்டு மாதங்களுக்கு மேல் உள்ள வேப்பங்கொட்டையைத் தவிர்க்கவும், எப்போதும் புதிதாக சேகரித்ததையே பயன்படுத்தவும்.

வேப்பங்கொட்டை கரைசலை புதிதாக தயாரித்து தெளிப்பதே நல்லது. இந்த கரைசலை மாலை நேரத்தில் தெளித்தால் பூச்சியைக் கட்டுப்படுத்தும் செயல் திறனை அதிகரிக்கலாம். விவசாயிகள் இதனை நன்கு அறிந்து செயல்படுவது நல்ல பலனளிக்கும்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

7 thoughts on “வேம்பும், வேளாண் பயன்களும்!

 1. Ganeshamoorthy says:

  காதி சோப்பு என்றால் என்ன ? இது எப்படி இயற்கை விவசாயமாகும் என்பதை சற்று விளக்குங்கள்.

  • gttaagri says:

   காதி சோப்பு என்பது தாவர எண்ணையில் இருந்து தயாரிப்பது. டிடர்ஜண்ட் சோப்பு இல்லை. இதை நீங்கள் காதி வஸ்திராலயாவில் வாங்கலாம். மஞ்சள் கலரில் நீளமாக இருக்கும், இதனால் பயிர்கள் பாதிப்பு இருக்காது .டிடர்ஜண்ட் சோப்பு பயிர்கள் பாதிக்கப்படும்

 2. இந்திரன் says:

  காதி சோப்புக்கு பதிலாக வேறு சோப்பை பயன் படுத்த முடியுமா?

  • gttaagri says:

   இல்லை. மற்ற சோப்புகள் டிடெர்ஜென்ட் மூலம் தயார ஆனவை. இவை தாவரங்களை கொன்று விடும். காதி சோப்பு காதி கடைகளில் கிடைக்கும்.

 3. மதுரை நிஸார் says:

  தண்ணீர் 100 லிட்டரா ? அல்லது 10 லிட்டரா ?
  எது சரியான அளவு ? பதிவில் எழுத்துப்பிழை என எண்ணுகிறேன்.

 4. Gurumoorthy says:

  வணக்கம். தாங்கள் கூறிய வேம்புக்கரைசலை எந்த அளவில் தண்ணீரைகலந்து எதன் மூலம் தெளிப்பது எனக் கூறவும்

Leave a Reply to gttaagri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *