30 கோடி பேரின் உணவை அழித்த ஆப்பிரிக்க பூச்சி இந்தியாவில்!

உலகமயமாக்கலின் ஒரு விளைவு உலகம் முழுவதும் வர்த்தகம் அதிகரிப்பது. ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கு கன்டைனர் டப்பாக்களில் இன்று மிக வேகமாக பொருட்கள் போகின்றன.

இவற்றோடு சேர்ந்து கொண்டு ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கு பூச்சிகளும் செடிகளின் விதைகளும் செல்கின்றன. புதிய இடத்தில அவற்றிக்கு இயற்க்கை எதிரி இல்லாததால் இவை காட்டு தனமாக வளருகின்றன.

பார்த்தீனியம், ஆகாய தாமரை, ஆப்ரிக்க நத்தை வழியில் இப்போது இன்னொரு வெளிநாட்டு அழையா விருந்தாளி…

30 கோடி பேரின் உணவை அழித்த ஆப்பிரிக்க பூச்சிகள் இப்போது இந்தியாவில்! #RedAlert

விவசாயத்தில் பூச்சிகளின் மகத்துவம் மிக முக்கியமானது. நன்மை செய்யும் பூச்சிகளால் விவசாயிகளுக்கு நன்மை மட்டுமே நடக்கும். தீமை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் பிரச்னையை பூதாகரமாக்கும்.

அப்படிப்பட்ட ஆப்பரிக்க கண்டத்தின் பூச்சி வகை ஒன்று ஆசியாவில் முதல்முதலாக கர்நாடக மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் எளிதாக கடந்து செல்ல அது சாதாரண பூச்சி வகையைச் சேர்ந்தது கிடையாது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூச்சியின் பெயர் ஃபால் ஆர்மிவோர்ம் (Fall Armyworm). இதன் வேலை முழுநேரமாக விவசாயிகளுக்குத் தொல்லை கொடுப்பதுதான்.

இதனைக் கட்டுப்படுத்தும் முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் பல விவசாயிகளின் கவலைக்குக் காரணம்.

பூச்சிகள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபால் ஆர்மிவோர்ம் என்ற வெளிநாட்டுப் பூச்சி, கடந்த ஜூலை மாதம் கர்நாடகாவில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியுள்ளது எனவும், அது மற்ற மாநிலங்களுக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனவும் எச்சரித்துள்ளது.

ஃபால் ஆர்மிவோர்ம் என்னும் பூச்சியின் அறிவியல் பெயர் Spodoptera frugiperda.இது வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சி வகையாகும். 2016-ம் ஆண்டு இப்பூச்சி அமெரிக்க மக்காச்சோள பயிரைத் தாக்கி அந்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது ஆப்ரிக்கா நாடுகளுக்கும்  2016-17 ஆண்டுகளில் பரவியது. ஆப்ரிக்காவில் பிரதானமான உணவு மக்காச்சோளம் தான். இந்நிலையில் 2016-ம் ஆண்டு இப்பூச்சியால் அழிந்த உணவானது 300 மில்லியன் மக்களுக்கான உணவு என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம்.

ஆசியக் கண்டத்தில் இப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது, இதுவே முதல்முறை. இந்தியாவில் இப்பூச்சியின் தாக்கம், கர்நாடக மாநிலம், சிவமோகா பகுதியில் இருக்கும் விவசாய மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தில் மே 18 தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அது இந்தியாவைச் சேர்ந்த ஒருவகை பூச்சி என்றுதான் முதலில் கருதப்பட்டது. இதன் தாக்கத்தை கண்டு சி.எம்.காலேஷ்வர சுவாமி மற்றும் சரனபாசப்பா என்னும் பூச்சியியல் வல்லுநர்கள் சந்தேகம் கொண்டு அதை டி.என்.ஏ பரிசோதனைக்கு பெங்களூர் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பினர். அதன் முடிவுகள் அப்பூச்சி ஃபால் ஆர்மிவோர்ம் என்பதை உறுதி செய்தது.

புழு

இப்பூச்சியின் தாக்கம் கர்நாடகாவின் சிக்கப்பல்லூரில் 70 சதவீதம் காணப்பட்டது. மேலும் 8-9 மாவட்டங்களில் இப்பூச்சிகள் பரவியுள்ளன. இப்பூச்சி அதிகமாக 20-25 நாட்கள் தொடர்ந்து ஒரு பயிரைத் தாக்குகிறது. இப்பூச்சியின் தாக்கத்தை மற்ற சில பூச்சிகளை வைத்தும், இயற்கை முறையிலும் குறைக்கலாம். அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இதுவரை இப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறை அறியப்படவில்லை. இந்த வகை பூச்சி இலையுதிர் காலத்தில் பயிர்களை தாக்கும். இவை மக்காச்சோளம் மட்டுமின்றி 80 வகையான பயிர்ளைத் தாக்கும் ஆபத்தும் கொண்டிருக்கின்றன. இதன் வாழ்நாள் 30-40 நாட்கள். இதன் பெண்பால் பூச்சிகள் தன் வாழ்நாளில் ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் கொண்டது. இது வேகமாகப் பரவும் இயல்பு உடையது. இவை அயல்நாட்டு உணவு பண்டங்கள் மூலமாக இந்தியாவுக்குப் பரவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவை பக்கத்து மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு வேகமாகப் பரவ அதிக வாய்ப்புள்ளது. இவை பயிர்களின் உற்பத்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் பூச்சியியல் கட்டுப்பாட்டு மையம் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இப்போதைக்கு மக்காச் சோளத்தை மட்டுமே இப்பூச்சி உணவாக எடுத்துக் கொண்டு வருகிறது என்பது மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *