இயற்கை விவசாயம் மூலம் மஞ்சள் சாகுபடியில் சாதனை!

ஒரே செடியில் ஏழு கிலோ மஞ்சள், ஒரு ஏக்கரில் 40 டன் மஞ்சள் எடுத்து சத்தியமங்கலம் செண்பகப்புதுார் விவசாயி ராமமூர்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தனது தோட்டத்தில் பயிர்களை காவு வாங்கும் பூச்சி மருந்து, மண் வளத்தை பாழாக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சகாவ்யம், மண்புழு உரம், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

இவர் தனது தோட்டத்தில் புதிய ரக ‘பிரதீபா’ மஞ்சளை பயிர் செய்தார். சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண் உரங்களை மட்டுமே பயன்படுத்தி மஞ்சள் மகசூல் செய்தார்.

கிழங்கு அழுகல் நோய், இலை கருகல் நோய் என எவ்விதமான நோயும் மஞ்சள் கிழங்குகளை தாக்கவில்லை.

பூச்சிகளையும், புழுக்களையும் விரட்ட இயற்கை ஊக்கிகளை மட்டுமே பயன்படுத்தினார்.

மஞ்சள் அறுவடை தற்போது நடைபெற்றது.பயிரிடப்பட்ட பிரதீபா ரக மஞ்சள் செடி ஒன்றில் ஆறு கிலோ முதல் ஏழு கிலோ வரை தரமான மஞ்சளும், ஒரு ஏக்கரில் 40 டன் மஞ்சளும் கிடைத்தது.

 

 

ராமமூர்த்தி கூறியதாவது:

  • நம்பிக்கை தரும் முக்கிய பணப்பயிர்களில் மஞ்சள் முதன்மையானது.
  • தமிழகத்தில் ஆண்டு தோறும் 7 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், தாளவாடி, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் அதிகளவு மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
  • மஞ்சளில் பல ரகங்கள் இருந்தாலும் பிரதீபா ரக மஞ்சள் இந்த ஆண்டு பருவத்திற்கு ஏற்றது. நோய் தாக்குதலை தாங்கி குறைந்த அளவு தண்ணீரில் அதிகளவு மகசூல் தரக்கூடியது.
  • சாதாரணமாக ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 25 டன் வரை மட்டுமே மஞ்சள் எடுப்பதே பெரும் சவாலாக இருக்கும். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு ஏக்கரில் 40 டன் மஞ்சள் மகசூல் எடுக்கப்பட்டது. மஞ்சள் தோட்டத்தை பார்வையிட்டு பிரதீபா ரக மஞ்சள் சாகுபடி முறைகளை விவசாயிகள் கேட்டு செல்கின்றனர் என்றார். தொடர்புக்கு 09442352121

கா.சுப்பிரமணியன், மதுரை.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *