மார்கழி மாதப் பட்டத்தில் மணிலா (நிலக்கடலை) பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம் என திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன், விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மணிலா விதைப்பு செய்ய ஏற்றப் பருவமான இந்த தருணத்தில் பின்வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிலா பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம்.
- தை மாதம் முதல் தேதிக்குள் மணிலா விதைப்பை செய்து முடித்திட வேண்டும்.
- காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உள்ள செம்மண் மற்றும் இருமண் பாடுள்ள மண்வகை, மணிலா பயிரிட ஏற்றது.
- நல்ல விளைச்சல் பெற வேண்டுமானால் நல்ல விதை அவசியம். சான்றுப் பெற்ற டி.எம்.வி.2,டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, வி.ஆர்.ஐ.ஜி.என்.5 ஆகிய ரகங்கள் இப்பருவத்துக்கு ஏற்றதாகும்.
- சிறியப் பருப்பு விதைகள் ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோவும், பெரிய பருப்புகள் கொண்ட விதைகள் ஏக்கருக்கு 55 முதல் 60 கிலோ தேவைப்படும்.
விதை நேர்த்தி:
- விதைகளின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக் கொல்லிகளான திராம் மற்றும் பாவிஸ்டின் ஆகியவற்றை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 2 கிராம் வீதம் நன்றாக கலந்து 24 நேரம் வைத்திருந்து, பின்னர் விதைப்பது அவசியம்.
விதைப்பு செய்தல்:
- மண்ணின் தன்மை மற்றும் நீர்ப்பிடிப்புத் தன்மையை பொறுத்து, வயலை 3 அல்லது 4 முறை புழுதிப்படக் கட்டிகள் இன்றி சீராக உழுது, பாத்திக் கட்டுவது அவசியமாகும்.
- உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மக்கிய குப்பைகளையோ அல்லது தொழு உரத்தையோ இடுவது மண் வளத்தையும், மகசூலையும் அதிகரிக்கும்.
- விதைக்கும்போது வரிசைக்கு வரிசை ஒரு அடி அல்லது 30 செ.மீ., செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் மட்டுமே விதைப்பு செய்ய வேண்டும்.
- களைக்கொட்டு மூலம் விதைப்பு செய்வதாயிருந்தால் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
- இதைவிட செடிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் மகசூல் கண்டிப்பாக குறையும்.
அடியுரம் இடுதல்:
- இறவை மணிலாவுக்கு கீழ்கண்ட அளவில் உரமிடுவது மிகவும் அவசியம்.
- பயிரின் சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும் நைட்ரஜன் சத்தான யூரியாவை ஏக்கருக்கு 35 கிலோவும், வேர்களின் சீரான வளர்ச்சி மற்றும் காய்பிடிப்பை அதிகரிக்கும்.
- மண் சத்தைத் தரும் சூப்பர் பாஸ்பேட் ஏக்கருக்கு 100 கிலோவும், பூச்சிநோய் தாக்குதலை தாங்கி வளரவும், வறட்சியைத் தாங்கி வளரவும், மகசூல் அதிகமாக உதவிடும்.
- சாம்பல் சத்தைத் தரும் பொட்டாஷுக்கு உரம் 40 கிலோவும் அடியுரமாக கடைசி உழவில் இடுவது மிகவும் நல்லது. மேலும் கடைசி உழவின்போது, திரட்சியான பருப்புகளை உருவாக்கவும், எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் உதவிடும்.
- ஜிப்சத்தினை ஏக்கருக்கு 80 கிலோ என்ற அளவில் இடுவது அவசியமாகும்.
பின்செய் நேர்த்தி:
- விதைப்புக்குப் பின், உயிர்நீர்ப் பாய்ச்சியும், பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
- உரிய நேரத்தில் களையெடுத்துப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
- இரண்டாம் களையின்போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட்டு, பின்னர் மண் அணைப்பது மகசூலை அதிகரிப்பதுடன், கம்பிகள் சீராக மண்ணில் இறங்கி அதிக எண்ணிக்கையில் காய்களாக மாறிட உதவும்.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ஏற்பட்டால் வேளாண்மைத் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி, மட்டுமே பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அறுவடை:
- மணிலாச் செடியின் நுனி இலை மஞ்சளாக மாறி, அடி இலைகள் காய்ந்து உதிரும்போது காய்களின் உட்புறம் கரும்பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இந்த தருணமே அறுவடைக்கு ஏற்ற நேரமாகும்.
- இந்தத் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் நடப்பு மார்கழிப் பருவத்தில் கூடுதல் மகசூல் எடுக்கலாம்.
- தற்போது அந்தந்த வேளாண் விரிவாக்க மையத்தின் சான்று பெற்ற விதை டி.எம்.வி.2 என்ற ரகம் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.12 மானியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதி விலையில் விதை கிராம திட்டத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு திருவெண்ணெய்நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
details for manal soil
அருமை