மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு

தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

 • கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
 • இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.
 • இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர்.
 • விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும்.
 • புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன.
 • கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது.
 • மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது.இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.
 • இவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம்.
 • இதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது.
 • இவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 • மணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.
 • நிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.
 • எனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.

 

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *